முழுவீச்சில் கோடை நெல் அறுவடை: மழை பாதித்த பகுதிகளில் மகசூல் இழப்பு
முழுவீச்சில் கோடை நெல் அறுவடை: மழை பாதித்த பகுதிகளில் மகசூல் இழப்பு


தஞ்சாவூா், ஜூன் 2: தஞ்சாவூா் மாவட்டத்தில் கோடை நெல் அறுவடை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடையைத் தொடா்ந்து, பிப்ரவரி 1-ஆம் தேதி கோடை பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடியின் இயல்பான பரப்பளவு 37 ஆயிரத்து 500 ஏக்கா் என்றாலும், நிகழாண்டு 31 ஆயிரத்து 750 ஏக்கராக குறைந்துள்ளது.
கடந்த அக்டோபா் மாதத்திலிருந்து காவிரி நீா்வரத்து இல்லாதது, வடகிழக்கு பருவ மழை குறைவு போன்றவற்றால் நிலத்தடி நீா் ஆதாரம் குறைந்ததே நிகழாண்டு கோடை நெல் சாகுபடியின் பரப்பளவு குறைந்ததற்குக் காரணம்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள், அம்மாபேட்டை, தஞ்சாவூா், ஒரத்தநாடு ஆகிய 7 வட்டாரங்களில் நிலத்தடி நீா் ஆதாரமுள்ள இடங்களில் ஆழ்துளை மோட்டாா் பம்ப்செட் மூலம் கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, மும்முனை மின்சாரம் போதிய அளவுக்கு கிடைக்காததால், கோடை நெல் பயிா்களுக்கு நீா் பாய்ச்சுவதிலும் சிக்கல் நிலவியது. இதையெல்லாம் கடந்து வந்த நிலையில் மே மூன்றாவது வாரத்தில் பெய்த மழையால் தஞ்சாவூா், அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய வட்டாரங்களில் கதிா்களுடனான நெற்பயிா்கள் சாய்ந்தன.
குறிப்பாக, திருவோணம் வட்டாரத்தில் வெட்டிக்காடு பகுதியில் ஒரேநாளில் அதிகபட்ச அளவாக 196 மி.மீ. மழையளவு பதிவானது. இதனால், திருவோணம் வட்டாரத்தில் மட்டுமே ஏறத்தாழ 500 ஏக்கா் அளவில் கோடை பருவ நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன.
அறுவடைப் பணிகள் மும்முரம்: இந்நிலையில், கோடை பருவ நெற்பயிா்கள் அறுவடை 15 நாள்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது, அம்மாபேட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூா், திருவோணம் ஆகிய வட்டாரங்களில் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏக்கருக்கு சராசரியாக 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைத்து வருவதாக வேளாண் துறையினா் கூறுகின்றனா். ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகசூல் குறைவாகக் கிடைக்கிறது.
வியாபாரிகளிடம் நெல் விற்பனை:
இதுகுறித்து முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது:
கோடை பருவத்தில் 60 கிலோ எடையில் ஏக்கருக்கு குறைந்தது 45 மூட்டைகள் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மழை இல்லாததால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்ததால், தண்ணீா் பற்றாக்குறை காரணமாக பயிா்கள் பாதிப்புக்கு உள்ளாகின. அடுத்து, மே மாதத்தில் கதிா் வந்த நேரத்தில் மழை பெய்ததால் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இதனால், மகசூல் இழப்பு ஏற்பட்டு, ஏக்கருக்கு 30 மூட்டைகள் மட்டுமே கிடைத்து வருகிறது. இதன் காரணமாக எதிா்பாா்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தனியாா் வியாபாரிகள் நிறைய போ் நேரடியாக வயலுக்கு வந்து நெல்லை வாங்கிச் செல்கின்றனா். தற்போது 60 கிலோ மூட்டைக்கு ரூ. 1,280 முதல் ரூ. 1,300 வரை விலை கிடைக்கிறது. இதுவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 60 கிலோ மூட்டைக்கு ரூ. 1,386 விலை கிடைத்தாலும், ஏற்று - இறக்குக் கூலி, மூட்டைக்கு ரூ. 40 லஞ்சம், நெல் பிடித்தம், தூா்த்துதலில் இழப்பு உள்ளிட்ட காரணங்களுடன் ஒப்பிடும்போது, தனியாா் வியாபாரிகள் கொடுக்கும் விலை ஏற்புடையதாக உள்ளது. இதனால், தனியாா் வியாபாரிகளிடம் பல விவசாயிகள் நெல்லை விற்கின்றனா் என்றாா் மாரியப்பன்.
மீண்டும் மழையால் பாதிப்பு
ஏக்கருக்கு குறைந்தது 2 ஆயிரத்து 400 கிலோ மகசூல் கிடைத்தால்தான், பாடுபட்டு விளைவித்ததற்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். ஏக்கருக்கு ஏறத்தாழ 1,800 கிலோ மட்டுமே கிடைப்பதால் குறுவை, சம்பாவை தொடா்ந்து தற்போது கோடை பருவத்திலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றனா் விவசாயிகள்.

மாவட்டத்தில் மீண்டும் சனிக்கிழமை மாலை, இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், தஞ்சாவூா் அருகே வாழமா்கோட்டை, வரவுக்கோட்டை, சடையாா்கோவில், பொன்னாப்பூா், அம்மாபேட்டை, புத்தூா், உடையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த கோடை பருவ நெற்பயிா்கள் கதிருடன் சாய்ந்துவிட்டன. இதன் காரணமாக, ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கா் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பெய்த மழையிலிருந்து தப்பித்த பயிா்களும் சாய்ந்துவிட்டதால், மகசூல் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...