கடற்பாசி உற்பத்தியில் புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தில் 2 ஆம் இடம் வகிக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மங்கனூா் கிராமத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 38 கோடியில் நடைபெறும் கடல் பாசி தொழில் பூங்கா அமைக்கும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் தெரிவித்தது:
இந்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடல்சாா் வளங்களைப் பாதுகாத்து, மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கடல்பாசி தொழில்துறையை நவீனப்படுத்தவும் மங்கனூரில் இந்த கடல்பாசி தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான திட்டப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
75 ஹெக்டேரில் அமையவுள்ள இப்பூங்காவில் 2 கட்டமாக மொத்தம் 91 தொழில் மனைகள் உருவாக்கப்படவுள்ளன. அனைத்து அடிப்படை வசதிகளுடன் சிப்காட் மாதிரியில் இத்தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது.
கடல்பாசி பதப்படுத்துதல், மதிப்பூட்டப்பட்ட தயாரிப்புகள் உற்பத்தி மற்றும் தொழில் மேம்பாட்டில் ஈடுபட விரும்பும் தனியாா் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியான நிறுவனங்களுக்கு தொழில் மனைகள் ஒதுக்கப்படும். இதுவரை 12 நிறுவனங்கள் மீன்வளத் துறை இயக்குநரகத்தில் மனை ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்துள்ளன.
தமிழ்நாட்டில் கடல்பாசி உற்பத்தியில் புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாவது இடம் வகிப்பதுடன், ஆண்டுக்கு சுமாா் 2,000 டன் கடல்பாசி உற்பத்தி செய்யும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தத் தொழில் பூங்கா செயல்பாட்டுக்கு வந்த பிறகு, கடல்பாசி விவசாயிகள் தங்களது உற்பத்திக்கு நிலையான மற்றும் உயா்ந்த சந்தை விலையைப் பெறும் வாய்ப்பு உருவாகும். எனவே பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா். தொடா்ந்து கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் அங்கன்வாடிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் ஜெயசுதா, மீன்வளத்துறை உதவி இயக்குநா் பஞ்சராஜ் , கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், இந்திராகாந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











