சிறைவாசிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக புதுகையில் "ப்ரீடம்' பெட்ரோல் நிலையம்!
நன்னடத்தை கொண்ட சிறைவாசிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சிறைத்துறையினர் மேற்கொண்டு


நன்னடத்தை கொண்ட சிறைவாசிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சிறைத்துறையினர் மேற்கொண்டு வரும் சீரிய முயற்சியாக புதுக்கோட்டையில் சிறைவாசிகளே இயக்கும் "ப்ரீடம்' பெட்ரோல் வழங்கும் நிலையக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுகை பெட்ரோல் வழங்கும் நிலையம் உள்பட மாநிலத்தின் 5 முக்கிய சிறைச்சாலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள 5 பெட்ரோல் வழங்கும் நிலையங்களும் இம்மாதத்தின் இறுதியிலோ, மார்ச் முதல் வாரத்திலோ தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைவாசிகளின் நடத்தை மாற்றம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கு சிறை வளாகத்துக்குள்ளே பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுடன், சிறைவாசிகளுக்கு வேலை கொடுத்து அந்த வேலைக்கான ஊதியம் அவர்கள் விடுதலையாகி வெளியே வரும்போது மொத்தமாக வழங்கப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் "ப்ரீடம் மார்க்கெட்' தொடங்கப்பட்டது. இந்த சிறைக்குள் தயாரிக்கப்படும் பொருள்கள், விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், தற்போது உணவகமும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளின் அடுத்த மைல்கல்லாக, சிறைவாசிகளைக் கொண்டு இயக்கப்படும் பெட்ரோல் வழங்கும் நிலையங்களைத் தொடங்க மாநில சிறைத்துறை முடிவு செய்தது. மற்ற மாநிலங்களின் முன்மாதிரிகளைக் கொண்டு, தமிழ்நாட்டில் 11 இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் வழங்கும் நிலையங்களைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டு முதல்கட்டமாக , புதுக்கோட்டை, வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புழல் ஆகிய 5 சிறைகளில் பெட்ரோல் வழங்கும் நிலையங்களை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட சிறை வளாகத்தில் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பிரதான சாலையில் 50 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு பெட்ரோல் பம்புகள், அணுகுசாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படைக் கட்டமைப்புகளும் ரூ. 2 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக திருச்சி மற்றும் புதுக்கோட்டைச் சிறைகளில் நன்னடத்தை கொண்ட தண்டனைக் கைதிகள் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக அவர்களுக்குப் பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற சிறைத்துறை அலுவலர்கள் இந்த நிலையத்தை மேலாண்மை செய்யும் பணிகளை மேற்கொள்வார்கள். முழுமையாக சிறைவாசிகளாலேயே இந்த நிலையம் நடத்தப்படவுள்ளது. இதற்காக சிறைவாசிகளுக்கு மாதம் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில், பிப்ரவரி மாத இறுதியிலோ, மார்ச் மாத முதல் வாரத்திலோ இந்த பெட்ரோல் வழங்கும் நிலையம் திறக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக சிறைவாசிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தொடங்கப்படவுள்ள 5 பெட்ரோல் வழங்கும் நிலையங்களுக்கான விழா என்பதால் மாநில முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் நாளுக்காக திறப்பு விழா தேதி முடிவு செய்யப்படவில்லை.
சிறைவாசிகளின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் நடத்தை மாற்றத்துக்கான மிக முக்கியமான தொழில் முயற்சி இது எனக் கருதப்படுகிறது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் மேலும் 6 இடங்களில் பெட்ரோல் வழங்கும் நிலையங்களைத் தொடங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...