குடிநீர் திட்டப்பணி விரைவாக முடிக்கப்படுமா? கரூர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் காவிரிக் குடிநீர் திட்டப்பணியை விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் காவிரிக் குடிநீர் திட்டப்பணியை விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகருக்குப் பாதுகாக்கப்பட்ட 147 லட்சம் லிட்டர் காவிரிக் குடிநீரானது வாங்கல், நெரூர், கட்டளை ஆகிய பகுதிகளின் காவிரியாற்றில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து நாள்தோறும் வழங்கப்படுகிறது. அதாவது நபருக்கு 6 நாட்களுக்கு 90 லிட்டர் வீதம்.
பெருகும் மக்கள்தொகையால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைக் களையும் வகையில் ஜெர்மானிய நிதி நிறுவனமான கேஎப்டபிள்யூ நிதியுதவியுடன் கரூர் நகராட்சி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ. 68.40 கோடியில் நெரூர் காவிரியாற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2011-ல் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
2014-க்குள் முடிக்க வேண்டிய இத்திட்டத்தில் தற்போது ஓரளவு பணி மட்டுமே முடிந்துள்ளது. கரூர் நகர்ப் பகுதியில் 100 சதவீதம் பணி நிறைவடைந்த நிலையில் தாந்தோணி பகுதியில் 70 சதவீத பணி முடிந்துள்ளது. இனாம்கரூர் பகுதியில் 25 சதவீத பணிகூட முடியாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியது:
குடிநீர் திட்டப்பணியை ஆந்திரத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வரின் உறவினர்கள்தான் டெண்டர் எடுத்துச் செய்து வந்தனர். இடையில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் திட்டத்தைக் கைவிட்டனர்.
இதையடுத்து அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி, மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை ஆகியோரின் முயற்சியால் பணியைத் தொடங்கினர். ஆனால் கட்டடப் பொருள் விலையேற்றம் உள்ளிட்டவை காரணமாக மீண்டும் பணியைக் கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களிடம் வாக்குறுதி அளித்தவாறு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில் மீண்டும் மு. தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் ஆந்திர ஒப்பந்ததார்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையால் தற்போது மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
தாந்தோணி பகுதிக்கு காவிரிக் கட்டளைப் பகுதியில் இருந்து 22 கி.மீ. தூரம் ராட்சதக் குழாய் பதித்து தாந்தோணி பொன்நகரில் ஷம்பு (கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி) அமைத்துள்ளோம். இதிலிருந்து 88.7 லட்சம் லிட்டர் குடிநீர் ராயனூர், செல்லாண்டிபாளையம், ஆட்சியரகப் பின்புறம், தாந்தோணிமலை,தோரணக்கல்பட்டி உள்ளிட்ட 7 இடங்களிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலைக்குடிநீர் தொட்டியில் நிரப்பப்பட உள்ளது.
இத் திட்டத்தில் தற்போது ஆட்சியரகப் பின்புறம் உள்ள பகுதிக்கு மட்டும் தண்ணீர் எடுத்துச் செல்லும் வகையில் குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
70 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. அடுத்த மாத முதல் வாரத்தில் தாந்தோணி பகுதியில் புதிய திட்டத்தில் குடிநீர் விநியோகிக்கப்படும்.
இனாம்கரூர் நகர்ப் பகுதிக்கு ஏற்கெனவே மேலமாயனூர் காவிரியாற்றில் இருந்து கேவிபி நகரில் உள்ள ஷம்புக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு 53.6 லட்சம் லிட்டர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது இப்பகுதியில் இரு மேல்நிலைக்குடிநீர் தொட்டிகள் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளோம்.
வாங்கப்பாளையத்தில் முன்பு காவல் நிலையம் இருந்த இடத்திலும், திருக்காம்புலியூரிலும் இடம் பார்த்துள்ளோம். விரைவில் அங்கு பணி தொடங்கப்பட்டு ஒரு நாளைக்கு நபருக்கு 135 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இனி இனாம்கரூர், தாந்தோணி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடே இருக்காது.
2014-க்குள் முடிக்கும் வகையில்தான் முதல்வர் ஜெயலலிதா இத் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் காலம் கடந்து இப்போது முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்றனர் அவர்கள். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஆண்ட்ரூஸ் கூறுகையில், ஆமை வேகத்தில் நடைபெறும் குடிநீர் திட்டப் பணி இன்னும் முடியவில்லை.
தாந்தோணி பகுதியில் 22 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விடப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் நள்ளிரவில் 12 மணிக்கு மேல், ஒரு மணிநேரம் மட்டும்தான். இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...