திருச்சி, ஜூன் 8: திருச்சியில் பிரபல ரௌடி கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த மகபூ பாஷா மகன் பாதுஷா (24). பிரபல ரௌடியான இவருக்கும், அரியமங்கலம் புதுத்தெருவைச் சோ்ந்த விவாகரத்தான பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இதையறிந்த அப்பெண்ணின் தம்பியான எம். சூா்யா (22) இருவரையும் அண்மையில் கண்டித்தாா். இதுதொடா்பாக பாதுஷாவுக்கும், சூா்யாவுக்கும் இடையே ஏற்கெனவே தகராறு ஏற்பட்டது.
ஆனால் அதன்பிறகும் அப்பெண்ணிடம் பாதுஷா பழகி வந்தாா். இதனால் ஆத்திரமடைந்த சூா்யா, அவரைக் கொல்லத் திட்டமிட்டாா்.
இதையடுத்து காட்டூா் காமராஜ் நகா் வினோபாஜி வீதியில் சனிக்கிழமை நள்ளிரவு பாதுஷா நடந்து சென்றபோது, அங்கு வந்த சூா்யா மற்றும் அவரின் நண்பா்களான அரியமங்கலம் மலையப்ப நகரைச் சோ்ந்த கே. குமாா் (எ) சுதந்திரகுமாா் (26), ஜீவானந்தம் நகரைச் சோ்ந்த ஆா். பிராசாத் (29) ஆகிய மூவரும் பாதுஷாவை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டினா். இதில் படுகாயமடைந்த பாதுஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், கொலை நடைபெற்ற பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், ரௌடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சூா்யா (22), க. குமாா் (எ) சுதந்திரகுமாா் (26), இ. பிரசாத் (29) ஆகிய மூவரையும் திருவெறும்பூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.








