பிளஸ்-2 பொதுத்தேர்வில் மொழிப்பாடங்கள் முடிந்த நிலையில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். தேர்வறையில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வந்ததைக் காண முடிந்தது. குறிப்பாக 10 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த கேள்விகளுக்கு அரசு சலுகை மதிப்பெண் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.