/

வாகனப் புழுதியால் அவதிப்படும் மக்கள்

அரியலூர், அக். 9: மணல் லாரிகள், கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் புழுதியால் கீழப்பழூரில் நிற்பதற்குக்கூட பொதுமக்கள் அஞ்சக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.    அரியலூர் மாவட்டம், கீழப்பழூரைச் சுற்றியுள்ள பல்வேறு க

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:46 pm

கு. வைத்திலிங்கம்

அரியலூர், அக். 9: மணல் லாரிகள், கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் புழுதியால் கீழப்பழூரில் நிற்பதற்குக்கூட பொதுமக்கள் அஞ்சக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

   அரியலூர் மாவட்டம், கீழப்பழூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அரியலூருக்கோ, தஞ்சாவூருக்கோ, திருச்சிக்கோ செல்ல வேண்டும் என்றால், அவர்கள் கட்டாயம் கீழப்பழூர் வந்துதான் செல்ல வேண்டும்.

    இதேபோல, திருச்சியிலிருந்து அரியலூர், ஜயங்கொண்டம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து சேலம், பெரம்பலூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் பேருந்துகள் வந்து செல்லும் மையப் பகுதியாக கீழப்பழூர் விளங்கி வருகிறது.

   ஆனால், இந்த மையப் பகுதி அமைந்துள்ள இடம் சாதாரண கிராமத்தில் தெருக்களில் அமைக்கப்பட்டிருக்கும் சாலை பெற்றிருக்கும் வசதியைக்கூட, இங்குள்ள  சாலைகள் பெற்றிருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் மேடு பள்ளங்கள்தான். மழை பெய்தால் நிலைமை படுமோசம். இரு சக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாது.

    அரியலூர், அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வெளி மாவட்டங்களில் உள்ள சிமென்ட் தொழில்சாலைகளுக்கு சுண்ணாம்புக் கல் உள்ளிட்ட மூலப்பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால், எந்த நேரமும் கீழப்பழூர் பகுதி புழுதி நிறைந்தே காணப்படுகிறது.

  இதுமட்டுமல்லாமல், திருமானூர், திருமழப்பாடி பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை நோக்கி மணல் எடுத்துச் செல்லும் லாரிகளும் புழுதியை ஏற்படுத்திச் செல்கின்றன. அளவுக்கு அதிகமாக எடையை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், இந்தச் சாலையில் செல்ல முடியாமல் திணறும் போது, மேலும் பல மடங்கு புழுதியை அந்த வாகனங்கள் ஏற்படுத்திச் செல்கின்றன.

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு:  10 நிமிஷங்கள் முதல் 20 நிமிஷங்கள் வரை பேருந்துக்காக காத்திருந்தால், அதற்குள் முகம் முழுவதும் தூசி படர்வதுடன் மூக்கு அரிப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படத் தொடங்கிவிடுகின்றன. மேலும், சிலருக்கு தும்மலும் ஏற்படுகிறது.

வியாபாரிகளுக்கும் பாதிப்பு: கடை வைத்து வியாபாரம் செய்வதைக் காட்டிலும், கடைக்குள்ளும், வெளியேயேயும் ஏற்படும் தூசியை அகற்றி சுத்தம் செய்வதே வியாபாரிகளுக்கு பெரும் வேலையாக உள்ளது. மேலும், மக்கள் நடமாட்டம் உள்ள இந்தப் பகுதியில் வரும்போதுதான், கனரக வாகனங்கள் மிகவும் வேகமாகச் செல்கின்றன. இதனால், சாலையைக் கடக்க முடியாத நிலை உள்ளது என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள்.

புதிய தார்ச் சாலையே தீர்வு:  2 மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதியாக விளங்கி வரும் கீழப்பழூர் பகுதியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மழை பெய்தால் வாகனங்கள் எல்லாம் தள்ளாடிச் செல்லும் நிலைதான் தற்போது இருந்து வருகிறது. எனவே, மக்களை புழுதி மண்டலத்திருந்து காக்கும் வகையில், உடனடியாக புதிதாகத் தார்ச் சாலை அமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் இப் பகுதி மக்கள்.               

 காவலர்கள் வேண்டும்:தொடர்ச்சியாக வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் என போக்குவரத்து தொடர்ந்து இருந்து வரும் இந்தச் சாலையில் பெயருக்குகூட போலீஸார் பணியில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல தரப்பிலிருந்தும் கூறப்படுகிறது.

      சாலையின் இருபுறங்களிலும் பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், முன்னே உள்ள வாகனத்தை முந்திச் செல்ல முயற்சிக்கும் கனரக வாகனங்கள், மணல் லாரிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையிலும், உயிரிழப்புகள் போன்ற நிகழ்வுகள் நேரிடாமல் தடுக்கும் வகையிலும், காலை மற்றும் மாலை நேரங்களிலாவது போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

     புழுதியால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படும் பொதுமக்களை காக்கும் வகையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.