/

பதவி உயர்வு கிடைக்காத தலைமைக் காவலர்கள்

அரியலூர், ஏப். 26: திருச்சி, அரியலூர் உள்பட 5 மாவட்டங்களில் காவல் துறையில் 25  ஆணடுகளாகப் பணிபுரிந்தும் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு கிடைக்காமல் சுமார் 200-க்கும் மேற்பட்ட தலைமைக் காவலர்கள் பாதிக

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:20 pm

கு. வைத்திலிங்கம்

அரியலூர், ஏப். 26: திருச்சி, அரியலூர் உள்பட 5 மாவட்டங்களில் காவல் துறையில் 25  ஆணடுகளாகப் பணிபுரிந்தும் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு கிடைக்காமல் சுமார் 200-க்கும் மேற்பட்ட தலைமைக் காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகக் காவல் துறையில் உயர் அதிகாரிகள் பதவிக்கு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றி விட்டாலே அடுத்த பதவி உயர்வுக்கான தேர்வு நிலைப் பட்டியலில் அவர்கள் இடம் பெற்று உரிய காலத்தில் தக்க பதவி உயர்வுகள் கிடைத்து வருகின்றன.

   இதேபோல, காவல் துணைக் கண்காணிப்பாளராக குரூப் 1 தேர்வு மூலம்  தேர்வு செய்யப்படுவர் படிப்படியாக பயிற்சிக்குப் பிறகு பணியில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருவது இன்றளவும் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

  காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் நேரடியாகச் சேருபவர்களுக்கும் உரிய  காலத்தில் பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, முதல்நிலைக்  காவலராகப் பணியில் சேர்ந்தவர் ஆயுதப் படையில் பணியாற்றிய பிறகு, காவல் நிலையத்தில் பணியமர்த்தப்படுகிறார். இவ்வாறு 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர்,  அவருக்கு இரண்டாம் நிலைக் காவலர் பதவி உயர்வும், 15 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தலைமைக் காவலராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

  பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், தலைமைக் காவலர்களாக உள்ளவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வும், அதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் காவல் துறையில் பதவி உயர்வில் உள்ள வழக்கமான நடைமுறையாகும்.

   அந்த வகையில், கடந்த 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில்  காவலராகப் பணியில் சேர்ந்தவர்கள், தற்போது பதவி மூப்பு அடிப்படையில் தலைமைக் காவலர்களாக பல்வேறு நிலைகளில் (சட்டம் - ஒழுங்குப் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, உளவுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள்) பணியாற்றி வருகின்றனர்.

  அவ்வாறு 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களில் தற்போது திருச்சி மாநகரத்தில் பணியாற்றி வருபவர்களில் சுமார் 79 பேருக்கு மாநகரத்தில் காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்றவாறு சிறப்பு உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு 2011, பிப்ரவரி 1 ஆம் தேதி வழங்கப்பட்டு, அவர்கள் தற்போது காவல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.

   ஆனால், திருச்சி புறநகர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் கடந்த 1986 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, தற்போது தலைமைக் காவலர்களாகப் பணியாற்றி வரும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு இன்னமும் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

  "நாங்கள் வெயில், மழை, தேர்தல் என எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து  பணியாற்றி வருகிறோம். பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும்  அரசு விழாக்களுக்கும் பாதுகாப்புப் பணியில் 2 நாள்களுக்கு முன்னதாக அழைத்துச் செல்லப்பட்டு, நேரம் பார்க்காது பாதுகாப்பில் ஈடுபடுகிறோம். ஆனால், எங்களுக்கு உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு இதுவரை வழங்கப்படாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை.

   இந்தப் பதவி உயர்வு உரிய காலத்தில் வழங்கப்படாமல் இருப்பதால், எங்களுக்குக்  கிடைக்க வேண்டிய சலுகைகள் வரும் காலத்தில் கிடைக்காமல் போகலாம். அடுத்த பதவி உயர்வும் கிடைக்காமல் போகலாம். இப்படி தொடர்ச்சியான பாதிப்புகளும் ஏற்படும். ஊதிய உயர்விலும் பாதிப்பு ஏற்படும். உரிய காலத்தில்  உரிய பதவி உயர்வை வழங்காமல் இருப்பதால், எங்களுக்கு பெரும் பாதிப்புதான் தொடர்ந்து ஏற்படுமே தவிர, பலன் ஏதும் கிடைக்காது' என்கின்றனர் பாதிக்கப்பட்டுள்ள தலைமைக் காவலர்கள்.

   மாநகரக் காவல் துறையில் பணியாற்றுபவர்களும், தமிழகக் காவல் துறையில்தான் பணியாற்றுகின்றனர். நாங்களும் தமிழகக் காவல் துறையில்தான் பணியாற்றி வருகிறோம். ஒரு பகுதியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிவிட்டு, மற்றொரு பகுதியில் உள்வர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது நியாயம்தானா? இது பாதிக்கப்பட்டுள்ள தலைமைக் காவலர்களின் குரலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.