துவாக்குடி அருகே வீட்டு மனைகளாகும் குளம்
திருவெறும்பூர், செப். 6: திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள நீர்பிடிப்பு குளத்தை வீட்டு மனைகளாக மாற்றும் முயற்சியில் தனியார் சிலர் ஈடுபட்டுள்ளனர். துவாக்குடி அருகேயுள்ள தேசிய தொழில்நுட்பக் கல


திருவெறும்பூர், செப். 6: திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள நீர்பிடிப்பு குளத்தை வீட்டு மனைகளாக மாற்றும் முயற்சியில் தனியார் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
துவாக்குடி அருகேயுள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் பின்புறம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது வானவாசி குளம். இந்தக் குளத்தை அரசு அனுமதி இல்லாமல், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் சிலர் வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்யும் திட்டத்துடன் குளத்தில் மண் நிரப்பி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துவாக்குடி நகராட்சி, துவாக்குடி மலை வடக்கு ராஜீவ் காந்தி நகர் அருகில் உள்ள இந்தக் குளம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நீர்பிடிப்பு பகுதியாக இருந்தது. இந்தக் குளத்து தண்ணீர் மூலம் சுமார் 500 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவசாய நிலங்கள் தற்போது வ.உ.சி. நகர், ராஜீவ் காந்தி நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகளாக மாறியுள்ளன. மேலும், குளத்தைச் சுற்றிலும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், இந்தக் குளம் விவசாயத்திற்கு பயனில்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில்தான் குளத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் சிலர் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உதவியுடன் குளத்தைச் சமன் செய்து, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, குளத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர். மேலும், துவாக்குடி நகராட்சி செயல் அலுவலரிடம் இதுகுறித்துப் புகார் தெரிவித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி கூறியது:
துவாக்குடி வானவாசி குளம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது இந்த விவசாய நிலங்களெல்லாம் குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன. இதனால், இந்தக் குளம் பயனற்று இருந்தது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு தனிநபர்கள் சிலர் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின் முழு ஒத்துழைப்புடன் கடந்த வாரம் இந்தக் குளத்தை ஆக்கிரமித்து, குளத்தில் மண் நிரப்பி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தடுக்கும்படி துவாக்குடி நகராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவர் இதுகுறித்து தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும், இதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, துவாக்குடி காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் பேரில், அங்கு சென்ற போலீஸôர் குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களைத் தடுத்து நிறுத்தினர். சாலை போடும் பணியில் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டது.
குளம் ஆக்கிரமிப்பு குறித்து வட்டாட்சியரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனாலும், குளத்தை ஆக்கிரமிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தக் குளத்தை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்டு, அதை வீட்டுமனை இல்லாத ஏழைக் குடும்பங்களுக்குப் பிரித்துக் கொடுத்தால் அவர்கள் பயனடைவர் என்றார் அவர்.
இதுகுறித்து துவாக்குடி நகராட்சி செயல் அலுவலர் கூறியது:
இந்தக் குளத்தை வீட்டுமனைகளாக்க எந்த அனுமதியும் நகராட்சி நிர்வாகம் கொடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.
இதுகுறித்து துவாக்குடி கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் கூறியது:
இந்தக் குளம் அரசுக்குச் சொந்தமானது. இந்தக் குளத்தை ஆக்கிரமிப்பு செய்வதாகத் தகவல் வந்தது. உடனே ஆக்கிரமிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும், இந்தக் குளத்தைப் பராமரித்து வந்த தங்கமணி மாணிக்கம், குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றார் அவர்.
நீர்பிடிப்பு குளங்களை வீட்டுமனைகளாக்கி விற்கக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், இதேபோல பல குளங்கள் திருவெறும்பூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. துவாக்குடி அருகேயுள்ள வாளவந்தான்கோட்டையிலும் இந்த ஆக்கிரமிப்பு தொடங்கியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...