ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அவல நிலையில் திருவெறும்பூர் அரசுக் கல்லூரி

திருவெறும்பூர்,  அக். 14:  திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் போதிய பணியாளர்களை நியமித்து, கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:53 pm

சி.சண்முகவேல்

திருவெறும்பூர்,  அக். 14:  திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் போதிய பணியாளர்களை நியமித்து, கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    திருவெறும்பூர் பகுதியில் அரசுக் கல்லூரி தொடங்க 1972-ல் கல்லூரிக் குழு அமைக்கப்பட்டது. குழுவின் தலைவராக அப்போதைய ஆட்சியர் டி.பி. பாரதியும், செயலராக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அப்போதைய உறுப்பினரான கு. காமாட்சியும் செயல்பட்டனர். அவர்களது முயற்சியால், 1973-ல் துவாக்குடி அருகே டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.

  1974-75 ஆம் கல்வியாண்டில், சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் இளநிலை வரலாறு, இயற்கை அறிவியல் ஆகிய இரு பாடப் பிரிவுகள் இக் கல்லூரியில் தொடங்கப்பட்டன. கல்லூரிக்கென கட்டடங்கள் இல்லாததால், பெல் ஆலை வளாகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

  பின்னர், அந்த ஆண்டிலேயே கல்லூரிக்குச் சொந்தமாகக் கட்டடம் கட்டிக் கொள்ள பெல் நிறுவனம் இடம் வழங்கியது. அப்போது முதல்வராக இருந்த மு. கருணாநிதியால் கல்லூரிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

  அதைத்தொடர்ந்து, 1975-77 ஆம் கல்வியாண்டில் இளநிலை நிறுவனச் செயலியல் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டதுடன், இருபாலர் கல்லூரியாகவும் மாற்றப்பட்டது.

  கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, 1.8.1977 முதல் சொந்தக் கட்டடத்தில் கல்லூரி இயங்கத் தொடங்கியது.

  பின்னர், பல்வேறு காலகட்டங்களில் இளநிலை வேதியியல், இளநிலை ஆங்கில இலக்கியம், இளநிலை வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. மேலும், கல்லூரியின் பெயரும் அரசு கலைக் கல்லூரி என்று மாற்றப்பட்டது.

  1993-ல் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் நிரந்தர இணைப்பை இந்தக் கல்லூரி பெற்றது. அதைத்தொடர்ந்து, இளநிலை பட்டப் படிப்பை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவின் எட்டாவது திட்டத்தில் மானியமும் பெற்றது.

  பின்னர், 2003-04 ஆம் கல்வியாண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவுடன் இளநிலை கணிதம், இளநிலை கணினி நிர்வாகம், முதுநிலை வணிகவியல், முதுநிலை வரலாறு, இலக்கியம் போன்ற படிப்புகள் சுயநிதிப் பிரிவில் தொடங்கப்பட்டன.

    கல்லூரி தொடங்கி 37 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தற்போது 1,150 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். 9 இளநிலை, 3 முதுநிலைப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

     தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளிலேயே அதிக மாணவர்கள் சேர்க்கையை கொண்டதாக விளங்குகிறது இந்தக் கல்லூரி.

      ஆனால், கல்லூரியில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் இல்லை.

    சுயநிதி பாடப் பிரிவுகள் முறையான பாடப் பிரிவுகளாக மாற்றப்பட்டதால், தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

    இந்த நிலையில், தமிழ் வழியில் இளநிலை வேதியியல், இயற்பியல், ஆங்கில வழி இயற்பியல் போன்ற பாடப் பிரிவுகளும், முதுநிலைத் தமிழ், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளும் தொடங்குவதற்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்க உடல் கல்வி இயக்குநர்கள் இல்லை. நூலகத்தில் 2,500-க்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், நூலகர் இல்லை.

  கல்லூரியில் 300 பேர் பயின்ற போது இருந்த எண்ணிக்கையிலேயே தற்போதும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளது.

    அதிலும், அலுவலகப் பணியாளர் இடங்கள், ஆய்வக உதவியாளர், பண்டகக் காப்பாளர், எரிவாயு தயாரிப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாக உள்ளன.

    இதனால், இருக்கிற ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் வேலைப் பளுவால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

     கல்லூரியில் உள்ள சிறிய விளையாட்டு மைதானமும், பராமரிப்பின்றி கரடுமுரடாக உள்ளது. சிற்றுண்டி நிலையத்துக்கு போதிய கட்டடம் இல்லாததால், மாணவ- மாணவிகள் உணவருந்த மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    18 வகுப்பறைகளுக்கு மேஜை, நாற்காலி உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் கிடையாது.  கல்லூரிக்கென கலையரங்கம் கிடையாது. மேலும், காவலாளி, துப்புரவுப் பணியாளர்களும் இல்லாததால் கல்லூரி வளாகத்தில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

  கல்லூரியின் பிரதான நுழைவு வாயிலில்  முள்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. கல்லூரிக்குச் செல்லும் சாலையின் இரு பக்கமும் மாணவ- மாணவிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில், 400 அடி ஆழமான கல் குவாரிகள் உள்ளன. ஆனால், கல்லூரிக்கு சுற்றுச் சுவர் கிடையாது.

  இதனால், சுற்றுப்புறங்களைச் சேர்ந்த கால்நடைகள் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிகின்றன.

  இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்பட கல்லூரி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடக்கும் கால்நடைக் கழிவுகள், மனிதக் கழிவுகள், குப்பைகள் என சுகாதாரச் சீர்கேட்டின் பிறப்பிடமாகவே இந்தக் கல்லூரி காணப்படுகிறது.

  போதிய கண்காணிப்பு இல்லாததால், கல்லூரி வளாகத்தில் தகாத செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

  இதுபற்றி அண்மையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கல்லூரியின் முதல்வர் வேதனையுடன் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

   எனவே, கல்லூரியில் காலியாக உள்ள அனைத்து நிலைப் பணியிடங்களையும் நிரப்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 1000 மாணவர்கள் அமரும் வகையில் கலையரங்கம், சுற்றுச் சுவர், சிற்றுண்டி கூடம் ஆகியவற்றை கட்ட வேண்டும்.

  கல்லூரியில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டைக் களையவும், மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சமூக விரோதிகளின் தகாத செயல்களுக்கு இடமளிக்காத வகையிலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.