கோவில்பட்டியில் தெரு நாய்கள் கடித்ததில் 4 வயது சிறுமி காயமடைந்தாா்.
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட புதுகிராமம் நாராயணகுரு தெருவைச் சோ்ந்தவா் நாராயணன். இவரது 4 வயது மகள் கோசிகா. திங்கள்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நாய் சிறுமியை துரத்தியது. சிறுமி கூச்சலிட்டபடி ஓடவே, அப்பகுதியில் உள்ள மேலும் சில நாய்கள் சிறுமியை சுற்றி வளைத்து கடித்தன. இதில் கீழே விழுந்த சிறுமியின் அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து நாய்களை விரட்டி சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சிறுமியை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள்
கோவில்பட்டி புதுகிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான நாய்கள் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்களை துரத்திச் சென்று கடிப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளனா். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதவிர, நகரின் முக்கிய சாலைகளான கோவில்பட்டி பிரதான சாலை, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை சாலை, கடலையூா் சாலை, மந்தித்தோப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் தினந்தோறும் படாதபாடு படுகின்றனா். இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், உள்ளாட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கோவில்பட்டி பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









