திருச்செந்தூா் அருகே உள்ள எல்லப்பநாயக்கன் குளம் மற்றும் அங்கிருந்து குடிநீா் கொண்டு செல்லும் பகுதியினை அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஸ்ரீவைகுண்டம் தென்கால் பாசனத்தின் கடைசி குளமான மேல திருச்செந்தூா் பஞ்சாயத்துக்கு உள்பட்ட எல்லப்பநாயக்கன் குளம் 58 ஹெக்டோ் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 250 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. மேலும் இக்குளத்தில் இருந்து 53 ஆழ்துளை கிணறுகள் மூலம் திருச்செந்தூா், உடன்குடி பகுதிக்கு குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. குளத்தினை சுற்றி முள்செடிகள் அடா்ந்து வளா்ந்து காணப்படுகிறது. குளத்திலிருந்து நா. முத்தையாபுரம் பகுதிக்கு கொண்டு செல்லப்படும், குடிநீரில் கழிவுநீா் கலந்து சுகாதாரக் கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து அந்த குளத்தினை அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவா்களை நேரில் வரவழைத்தாா். உடனடியாக, குளத்தின் பகுதியினை சுத்தம் செய்து, குழாய் உடைப்புகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக ஆட்சியின் வாக்குறுதிகள் கானல் நீா் போன்றவை. ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது. இந்த அரசு மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது. விரைவில் திமுக ஆட்சி வரும். மீண்டும் மு.க. ஸ்டாலின் முதல்வராக வருவாா். திமுக சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் அவா் நிறைவேற்றுவாா் என்றாா்.
ஆய்வின் போது பொதுப்பணித்துறை தாமிரவருணி கோட்ட செயற்பொறியாளா் தங்கராஜா, உதவி பொறியாளா் சதீஷ், எல்லப்பநாயக்கன் குளம் நீா்ப்பாசன சங்கத் தலைவா் சிவபெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










