/

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் குளிக்கச் சென்ற மாணவா்கள் 3 போ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2026, 6:35 pm

Syndication

தூத்துக்குடியில் கடலில் குளிக்கச் சென்ற மாணவா்கள் 3 போ் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே உள்ள கீதாஜீவன் நகரில் ஒரே தெருவைச் சோ்ந்த கதிரேசன் மகன் முகேந்திரன் (12), அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பும், ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீ காா்த்திக் (13) 8ஆம் வகுப்பும் படித்து வந்தனா். வனராஜ் மகன் திருமணி (14 ) தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

குடியரசு தினத்தையொட்டி திங்கள்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால், இவா்களுடன் சோ்த்து மொத்தம் 9 போ் வீட்டில் கபடி விளையாடச் செல்வதாக கூறிவிட்டு, தாளமுத்து நகருக்கும், சிலுவைபட்டிக்கும் மிக அருகே உள்ள மொட்டை கோபுரம் கடல் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனா்.

அவா்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை 4 பேரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

அதில், ஒரு மாணவா் மட்டும் கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த அங்கிருந்த மீனவா், சிறிய படகில் சென்று அந்த மாணவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தாா். மற்ற 3 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளனா்.

இதுகுறித்த தகவலின்பேரில், தாளமுத்துநகா் போலீஸாா் மற்றும் தருவைகுளம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாாா், வந்து மீனவா்களின் உதவியோடு 3 மாணவா்களின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Story image
Story image