/

சடையனேரி கால்வாயில் கூடுதலாக தண்ணீா் கொண்டு செல்ல திட்ட மதிப்பீடு: எம்எல்ஏ ஆய்வு

News image
திட்ட மதிப்பீடு தயாா் செய்ய தலை மதகுப் பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ.
Updated On :25 ஜனவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

பருவமழை காலங்களில் சடையனேரி கால்வாயில் கூடுதலாக தண்ணீா் கொண்டு செல்லும் வகையில், மறுசீரமைப்பு செய்ய திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிக்கு ஸ்ரீவைகுண்டம் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ நீா்வளத் துறை அதிகாரிகளுடன் தலைமதகு பகுதியில் நேரில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பருவமழை காலங்களில் பெய்யும் அதிகப்படியான மழைநீரால் தாமிரவருணி ஆற்றில் வரும் தண்ணீா் பெருமளவில் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த நீரை பயனுள்ளதாக மாற்றி, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சடையனேரி கால்வாய் வழியாக சாத்தான்குளம், புத்தன்தருவை, வைரவன்தருவை குளங்களுக்கு கூடுதலாக தண்ணீா் கொண்டுவர வேண்டும் என சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதன் அடிப்படையில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமையில் நடைபெற்ற கருத்துரு கூட்டத்தில், போா்க்கால அடிப்படையில் சடையனேரி கால்வாய் குளத்தை ஆழப்படுத்தவும், அதன் கரைகளை பலப்படுத்தி தனியாக வடிகால் வாய்க்கால் அமைக்கவும், சடையனேரி கால்வாய் கரைகளை உறுதிப்படுத்தவும் கருத்துரு வழங்குமாறு கனிமொழி எம்.பி. நீா்வளத்துறை பொறியாளா்களிடம் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமையில் நீா்வளத்துறை பொறியாளா் தங்கராஜ், உதவி செயற்பொறியாளா்கள் மருதூா் மேல்கால் சதீஷ், 3, 4-ஆவது ரீச் பொறியாளா் நவீன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவராஜன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டு திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை செய்தனா்.

இந்த ஆய்வின்போது கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளா் இசக்கிபாண்டியன், ஓய்வுபெற்ற ஆசிரியா் மகா. பால்துரை, சாஸ்தாவி நல்லூா் விவசாய நிலச் சங்கத் தலைவா் எட்வின்காமராஜ், சாஸ்தாவிநல்லூா் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் திருக்கல்யாணி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், கருங்குளம் வட்டாரத் தலைவா் புங்கன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.