பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு வழங்குவதில் தாமதம்: விவசாயிகள் பாதிப்பு
தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2012-13-ஆம் ஆண்டுக்கு காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால்


தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2012-13-ஆம் ஆண்டுக்கு காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சி, மழை, வெள்ளம், பனி மற்றும் பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதல் போன்றவற்றால் விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதாலும், வேளாண் பொருள்களின் விலை குறைவதாலும் வருமான இழப்பு ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுவதுதான் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்.
விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வளம் குன்றா வேளாண்மையை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு மத்திய அரசின் தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கடந்த 1999-ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டு, மாநில அரசுடன் இணைந்து தானிய பயிர்கள், பயறு வகைகள், வித்துப் பயிர்கள், காய்கனிப் பயிர்கள் ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு வட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பாசி, கம்பு, மக்காசோளம், சூரியகாந்தி, பருத்தி, பச்சைப்பயறு, துவரை, நிலக்கடலை, எள், பருத்தி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் போதிய மழை இல்லாததால் காரீப் (ஆகஸ்ட்-டிசம்பர்) மற்றும் ராபி (டிசம்பர்-ஏப்ரல்) பருவத்தில் பயிர்கள் அனைத்தும் ஆரம்பத்திலேயே கருகிவிட்டன. குறிப்பாக 6 லட்சம் ஏக்கர் காரீப் சாகுபடி பயிர்களும், 14 லட்சம் ஏக்கர் ராபி சாகுபடி பயிர்களும் 90 சதவீதம் காப்பாற்ற முடியாமல் பயிர் வளர்ச்சியே இல்லாமல் போனது.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாயினர். 2012-2013 வேளாண் பருவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 8 கோடி வரை பயிர்க் காப்பீட்டு பிரீமிய தொகையை விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தியுள்ளனர். ஒவ்வொரு பயிருக்கும் தகுந்தாற்போல் காப்பீட்டுக் கட்டணம் விவசாயிகளால் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயம் கடந்த ஆண்டு பொய்த்துப் போனதால் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து வேளாண் துறை வட்டாரங்கள் அளித்த தகவலில், தமிழகத்தில் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்தால் ரூ.740.805 கோடிக்கு இழப்பீடு தொகை கணக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மானியத்தில் மாநில அரசின் பங்குத் தொகையான ரூ.303.405 கோடியை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்துக்கு விடுவிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. கருத்துருவின் அடிப்படையில் அரசாணை பெறப்பட்டதும் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் மூலம் விவசாயிகளுக்கான நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் வரதராஜன் கூறியதாவது:
கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட ராபி மற்றும் காரீப் பருவ பயிர்களுக்கு ஓராண்டாகியும் பயிர்க் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. இந்த காலதாமதத்தால் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கும் நம்பகத்தன்மை விவசாயிகளிடம் குறைந்துபோக வாய்ப்பு உள்ளது. எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது, பயிர் இழப்பு ஏற்படும் காலகட்டங்களில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து, அதன்மூலம் பயிர் உற்பத்தியை அதிகப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...