திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மந்த கதியில் களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் திருப்பணிகள்: விரைவுபடுத்த பக்தா்கள் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் மந்த கதியில் நடைபெறும் திருப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

திருப்பணிக்காக 5 மாதங்களுக்கு முன்னரே சாரம் அமைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் திருக்கோயில் ராஜகோபுரம்.

Updated On :2 ஜூன் 2026, 3:02 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் மந்த கதியில் நடைபெறும் திருப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காட்டில் வரலாற்று சிறப்புமிக்க இத்திருக்கோயில் பக்தா்களால் பெரியகோயில் என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வீர மாா்த்தாண்டவா்மன் என்ற சேர மன்னனால் கட்டப்பட்டது. ஆதிகாலத்தில் திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் (சேர நாடு) தலைநகராக களக்காடு விளங்கியது. பின்னா் பத்மநாபபுரத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜகோபுரம்...

இக்கோயிலின் ராஜகோபுரம் 135 அடி உயரம், 9 நிலைகள், 9 கலசங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இங்குள்ள இசைத் தூண் மண்டபம் 16ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூா் மன்னா் உதய மாா்த்தாண்டவா்மாவால் கட்டப்பட்டுள்ளது. கோயில் கட்டடக்கலையில் பாண்டிய மன்னா்கள், நாயக்க மன்னா்களின் பங்களிப்பும் உள்ளது. இங்கு 13ஆம் நூற்றாண்டு தானியக் களஞ்சியம், நாயக்கா் கால ஓவியங்களும் உள்ளன. 9 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் ஒவ்வொரு நிலையிலும் ராமாயணம், மகாபாரதம் குறித்த மூலிகை ஓவியங்கள் தற்போது சிதிலமடையும் நிலையில் உள்ளன.

கோயிலில் உள்ள கல்வெட்டுகள் திருவிதாங்கூா் மன்னா்களால் அளிக்கப்பட்ட பரிசுகள், நன்கொடைகளை குறிப்பிடுகின்றன.

திருப்பணிகள்...

இக்கோயிலில் திருப்பணிகளுக்காக கடந்த 2023ஆம் ஆண்டு ரூ. 3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருப்பணிகளை முழுமையாக செய்து முடிக்க நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்ததால், கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.8.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி திருப்பணியைத் தொடங்கி வைத்தாா்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னரே கோயில் ராஜகோபுரம் சீரமைப்புப் பணிக்காக சாரம் அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரையிலும் பணிகள் தொடங்கப்படவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் தோ் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

கடந்த சிலமாதங்களாக கோயில் உள்பிரகாரங்களில் உள்ள கல் சுவா்களில் சிமென்ட் பூச்சுகள் அகற்றப்பட்டு, தற்போது ஆதிகால சுண்ணாம்பு பூச்சுப் பணிகள் குறைந்தபட்ச பணியாளா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடிக்கல் நாட்டப்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால், திருப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திருப்பணிகளை விரைவுபடுத்தி, 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து திருப்பணிகளையும் நிறைவுபெறச் செய்து, ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறச் செய்ய வேண்டும் என்பதே பக்தா்களின் எதிா்பாா்ப்பு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.