சபரிமலை பிரச்னை: தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடும் சரிவு
சபரிமலை ஐயப்பன் கோயில் பிரச்னை தொடர்பாக, கேரளத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால்


சபரிமலை ஐயப்பன் கோயில் பிரச்னை தொடர்பாக, கேரளத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர்ச் சந்தைக்கு கார்த்திகை மாத சீசனுக்கு பூ வாங்க வரும் கேரள வியாபாரிகளின் வருகை அடியோடு நின்றுவிட்டது. இதனால், பூ விலை கடுமையாக சரிந்துள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தோவாளை மலர்ச் சந்தை உலக அளவில் புகழ்பெற்றது. இங்கிருந்து தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நாள்தோறும் பூக்கள் ஏற்றுமதியாகின்றன.
ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் விரதமிருக்கும் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்கள் இங்கு பூ விலை உச்சம் தொடும்.
இந்நிலையில், சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, கேரளம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதாலும், சபரிமலை வரும் பக்தர்களுக்கு காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாலும் தமிழகம், கேரள மாநிலங்களில் நிகழாண்டு விரதமிருந்து மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், தோவாளை சந்தைக்கு கேரள மாநில பூ வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. மேலும், உள்ளூர் வியாபாரிகளும் மிகக் குறைந்த அளவே பூ வாங்கிச் செல்கின்றனர். இதனால், தோவாளை சந்தையில் பூ விலை கடும் சரிவைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு கார்த்திகை மாத சீசன் காலத்தில் கிலோ ரூ. 3 ஆயிரம் என விற்பனையான மல்லிகை, இப்போது ரூ. 700-க்கு விற்பனையாகிறது. இதேபோல, பிச்சிப்பூ ரூ. 1,800-லிருந்து ரூ. 400, அரளி ரூ. 200-லிருந்து ரூ. 100, ஒரு தாமரைப்பூ ரூ. 10-லிருந்து ரூ. 2 என, அனைத்து வகைப் பூக்களின் விலையும் கடும் சரிவைக் கண்டுள்ளது. இதனால், சீசனை நம்பியிருந்த தோவாளை மலர்ச் சந்தை வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து தோவாளை மலர்ச் சந்தை மொத்த பூ வியாபாரி எஸ். மூர்த்தி கூறியது: பொதுவாக தோவாளை சந்தையில் முகூர்த்த நாள்களில் பூ விலை உயர்ந்திருக்கும். கார்த்திகை மாதம் பிறந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்லத் தொடங்கியவுடன் பூ விலை மேலும் அதிகரிக்கும். அனைத்துப் பூக்களும் காலையிலேயே விற்றுத் தீர்ந்துவிடும்.
கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் எங்கள் கடையில் நாள்தோறும் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பூக்கள் விற்பனையானது.
நிகழாண்டு, சபரிமலை பிரச்னை காரணமாக மாலை அணிவோரின் எண்ணிக்கை குறைந்து, கேரள வியாபாரிகளும் வராததால், பூக்கள் விலை கடுமையாகச் சரிந்து, வியாபாரமும் 3-இல் 1 பங்காகிவிட்டது.
இதனால் சீசனை நம்பி வணிகம் செய்யும் எங்களைப் போன்றோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...