/

குமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் பணிகள்?

கன்னியாகுமரி - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலுக்கும் மார்த்தாண்டத்துக்கும் இடையே 3 இடங்களில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:04 am

பி.எஸ்.மீனாட்சிசுந்தரம்

கன்னியாகுமரி - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலுக்கும் மார்த்தாண்டத்துக்கும் இடையே 3 இடங்களில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தையும் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தையும் இணைக்கும் முக்கியச் சாலையாக அமைந்துள்ளது கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் ராஜபாதையாக இருந்த இந்தச் சாலை முன்பு 120 அடி அகலம் கொண்டதாக இருந்திருக்கிறது. பின்னர், ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது வெறும் இருவழிப்பாதையாக உள்ளது.
மார்த்தாண்டத்தில் ஒருவழிப்பாதை: திருவனந்தபுரத்திலிருந்து களியக்காவிளை வரையுள்ள கேரள மாநிலப் பகுதியில் இதே சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 56 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையின் அகலம் தேய்ந்துகொண்டே சென்றது. இதனால் தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் போனது.
இதைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முயற்சியால் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் சந்திப்புகளில் 240 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மார்த்தாண்டத்தில் மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வாகனங்கள் நேர்வழியில் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் வாகனங்கள் குழித்துறையிலிருந்து மேல்புறம் வழியாகச் சென்று இரவிபுதூர்கடை பகுதியில் மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் நிலை உள்ளது.
வில்லுக்குறியில் ஒருவழிப்பாதை: இதற்கிடையே, வில்லுக்குறியில் சாலையின் குறுக்கே செல்லும் பாலத்தில் அடிக்கடி கன்டெய்னர் லாரிகள் சிக்கி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பேச்சிப்பாறை மற்றும் மாம்பழத்துறையாறு அணையிலிருந்தும் தண்ணீர் செல்லும் இந்தப் பாலம், முதலில் அதிக உயரம் கொண்ட கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்விதமாக அமைக்கப்பட்டிருந்தது. பின்னர், சாலை செப்பனிடப்பட்டதால் சாலையின் உயரம் அதிகரித்துவிட்டது. இதனால் அடிக்கடி கன்டெய்னர் லாரிகள் சிக்கித் தவித்து வந்தன.
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வில்லுக்குறி பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலையின் உயரத்தை இரண்டரை அடி அளவுக்கு குறைக்கும் பணிக்காக சுமார் 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. வில்லுக்குறி பாலத்தின் கீழ் 65 மீட்டர் நீளத்துக்கு சாலையின் உயரம் இரண்டரை அடி அளவில் குறைக்கப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கான்கிரீட் அமைப்பதால் இனி சாலை செப்பனிடும்போது பாலத்தின் அடியில் ஜல்லி வைத்து உயர்த்தும் அவசியம் ஏற்படாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பணிக்காக வில்லுக்குறி பகுதியில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கிவரும் வாகனங்கள் நேராக அனுமதிக்கப்படுகின்றன. நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வாகனங்கள் தோட்டியோடு சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி இரணியல் வழியாக தக்கலை சென்றடையும்படி திருப்பிவிடப்படுள்ளன.
பார்வதிபுரத்தில் ஒருவழிப்பாதை: மார்த்தாண்டம் மற்றும் வில்லுக்குறி பகுதியில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்ட நிலையில், பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் வரும் 26 ஆம் தேதி தொடங்குவதால் இங்கும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட இருக்கிறது.
நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்களை டெரிக் சந்திப்பில் திருப்பிவிட்டு ஆசாரிப்பள்ளம் வழியாக சுங்கான்கடைக்கு அனுப்புவதா அல்லது திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி வரும் வாகனங்களை கள்ளியங்காடு சந்திப்பில் இடதுபுறம் திருப்பிவிட்டு, புத்தேரி பாலம் வழியாக நாகர்கோவிலுக்கு அனுமதிப்பதா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஆனால், பார்வதிபுரத்திலிருந்து வடசேரி செல்லும் எம்.எஸ். சாலையின் நடுவே தூண்கள் அமைக்கப்பட்டு, இடங்கள் இரும்பு தடுப்புச் சுவர்களால் மறைக்கப்பட்டுவிட்டன. நடு சாலையில் இரும்பு தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இப்போதே வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து திணறுகிறது. விரைவில் ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டால் கூடுதலாக ஏற்படும் வாகன நெரிசலால் நாகர்கோவில் வரும் பயணிகள் நிலைமை மிகவும் திண்டாட்டத்துக்குள்ளாகிவிடும்.
நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரை 37 கிலோ மீட்டர் தொலைவு சாலையைக் கடக்க மூன்று இடங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. ஏற்கெனவே இரண்டு ஒருவழிப்பாதையுடன் மூன்றாவதாக பார்வதிபுரம் ஒருவழிப்பாதையும் அறிவிக்கப்படும்போது பயணிகள் நிலை மிகவும் பரிதாபமாக மாறிவிடும்.
எனவே, நாகர்கோவில் - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப் பணிகளை விரைந்து நிறைவு செய்து, சிரமத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.