/

பணி தொடங்குவதில் 3 ஆண்டுகளாக இழுபறி குமரி, நாகர்கோவில் ரயில் முனைய விரிவாக்கத் திட்டம் உயிர்பெறுமா?

கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலைய முனைய விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:15 pm

பி.எஸ்.மீனாட்சிசுந்தரம்

கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலைய முனைய விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நாகர்கோவில் கோட்டாறில் உள்ள சந்திப்பு ரயில் நிலையம், ரூ.50 கோடி வருமானம் உள்ள ஏ பிரிவு ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையம் முனையமாக இருப்பதால், நாகர்கோவிலை மையமாக வைத்து பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் நெடுந்தூர ரயில்களும், அங்கு பராமரிப்பு வசதி இல்லாததால் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிப்புப் பணிகள் செய்யப்படுகின்றன.
இங்கிருந்து இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாகர்கோவில் பணிமனைக்கு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்கு என தற்போது சுமார் 500 ரயில் பெட்டிகள் உள்ளன. நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயில்களை நிறுத்தி வைத்து பராமரிக்க வசதிகளும், ரயில் பெட்டிகளை பழுது பார்க்கும் பணிமனையும் உள்ளன.
கன்னியாகுமரியிலிருந்து மங்களூர், புதுதில்லி, ஹைதராபாத், வேளாங்கண்ணி, கோவா, மும்பை போன்ற இடங்களுக்கும் நாகர்கோவிலிலிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் தினசரி ரயில்கள் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் நிறுத்திவைக்கவும், பராமரிப்பு செய்யவும் போதிய வசதி இல்லை என கூறி வருகிறது. இதற்கிடையே திருவனந்தபுரம் பணிமனையில் உள்ள அனைத்து பயணிகள் ரயில்களும் தற்போது நாகர்கோவில் பணிமனைக்கு பராமரிப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்துக்கு தேவையான ரயில்களை பராமரிக்க இடவசதி இல்லாமல் ஆகிவிடுகிறது.
இதுகுறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் கூறியது: கடந்த 2014ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் முனைய வசதி செய்யப்படும் என்றும், நாகர்கோவில் ரயில் நிலைய முனையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் முனைய வசதிகள் ஏற்படுத்தும் திட்டம் ஒப்புதல் பெறப்படாமலும், நிதி ஒதுக்கப்படாமலும் உள்ளது.
நாகர்கோவில் ரயில் நிலைய முனைய விரிவாக்கத் திட்டம், நாகர்கோவில் - மணியாச்சி இருவழிப்பாதை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
நாகர்கோவில் ரயில் நிலைய முனைய விரிவாக்கம் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையம் அனைத்து வசதிகளுடன் கூடிய முனைய நிலையமாக மாற்றப்பட்டால் இந்த இரு இடங்களிலிருந்து மதுரை, சென்னை வழியாக இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும் நிலை ஏற்படும். அதோடு திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சுவேலி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் குமரிக்கு நீட்டிப்பு செய்யப்படும். இதன் மூலம் இம்மாவட்ட பயணிகள் பயன்பெறுவர் என்றார் அவர்.
இதுகுறித்து, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டப் பொறியாளர் கூறியது: 2017ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், நாகர்கோவில் - மதுரை இரட்டைப்பாதை திட்டத்துக்கு நாகர்கோவிலிலிருந்து மணியாச்சி வரை ரூ.30 கோடியும், மணியாச்சியிலிருந்து மதுரை வரை ரூ.30 கோடியும், கன்னியாகுமரி - நாகர்கோவில், திருவனந்தபுரம் வரையிலான திட்டத்துக்கு ரூ.50 கோடியும் என ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு முனையம் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.