கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளில் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதாலும், பருவ மழை போதிய அளவு பெய்யாததாலும் நிகழாண்டு கும்பப்பூ சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.
இம்மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரண்டு போக சாகுபடிகள் நடைபெற்று வருகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீரையும், குளத்து நீரையும் நம்பி விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர். பொதுவாக தமிழகத்தில் மழை பொய்த்தாலும் கூட கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில தட்பவெப்ப நிலையை பொறுத்து மழை பெய்வதால் பொதுவாக எல்லா ஆண்டுகளிலுமே வளமாகவே இருக்கும்.
ஆனால் நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்து விட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை இதுவரை 60 சதவீத அளவுக்கு மட்டுமே பெய்துள்ளது. தொடர்ந்து மழை வருவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. குளங்களிலும் தண்ணீர் அளவு குறைந்துவிட்டது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 10.45 அடியாக உள்ளது. அணைக்கு 152 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 305 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் பேச்சிப்பாறை அணையில் 46.09அடி தண்ணீர் இருந்தது. இதே போல் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 33.30 அடியாக உள்ளது. கடந்த ஆண்டில் 75.15 அடியாக இருந்தது. சிற்றாறு 1 அணையில் 7.21 அடி நீர் உள்ளது. கடந்த ஆண்டு 16.89 அடி நீர் இருந்தது. சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 7.31 அடியாக உள்ளது. கடந்த ஆண்டில் 16.99 அடி நீர் இருந்தது. பொய்கை அணை, மற்றும் மாம்பழத்துறையாறு அணையிலும் கடந்த ஆண்டை விட குறைவான அளவு நீரே உள்ளது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அனந்தனாறு, பழையாறு, நாஞ்சில்நாடு புத்தனாறு, கால்வாய்களின் வழியாக முறைவைத்து திறக்கப்படுகிறது.
இம்மாவட்டத்தில் 6500 ஹெக்டேரில் கும்பப்பூ சாகுபடி செய்யப்படும். பருவமழை பொய்த்து விட்டதாலும், அணைகளில் நீர் இல்லாததாலும், பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 30 சதவீத சாகுபடி பரப்பு குறைந்து 4500 ஹெக்டேரில் மட்டும் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு பாசனக் குளங்களில் தண்ணீர் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கால்வாய் மூலம் நேரடி பாசனம் பெறும் சுமார் 400 ஹெக்டேர் பரப்பு நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வயல் வெளிகள் வறட்சியின் பிடியில் சிக்கி வெடித்து காணப்படுகிறது. அகஸ்தீசுவரம், குருந்தன்கோடு பகுதிகளில் அதிகளவு வறட்சி நிலவுகிறது.
கும்பப்பூ சாகுபடிக்கு பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் தேவை. ஆனால், இன்றைய நிலையில் அணையில் இருக்கும் நீர் இருப்பை கொண்டு அவ்வளவு நாள்களுக்கு தண்ணீர் திறப்பது என்பது இயலாத காரியம். எனவே மழை பெய்தால் மட்டுமே கும்பப்பூ சாகுபடியை காப்பாற்ற முடியும்.
இதுகுறித்து பறக்கையைச் சேர்ந்த விவசாயி நாகராஜன் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தின் வறட்சி நிலைக்கு மரங்களை வெட்டி வனங்களை அழித்ததுதான் காரணமாகும். இம்மாவட்டம் மட்டுமல்லாமல், அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்துக்கும் தண்ணீர் வழங்கிய பேச்சிப்பாறை அணையில் இன்று குமரி மாவட்டத்துக்கே தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையும் வறண்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் இருக்கும் மரங்களையாவது காக்க வேண்டும் என்றார்.