நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொறியியல்:​ இந்த ஆண்டும் "கோர் குரூப்' பாடங்களுக்கு கிராக்கி

திருநெல்வேலி, மே 7: பொறியியல் பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டும் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய "கோர் குரூப்' பாடப் பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:49 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, மே 7: பொறியியல் பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டும் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய "கோர் குரூப்' பாடப் பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மெக்கானிக்கல் பிரிவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில் தற்போது சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது. விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடப் பிரிவில் சேரும் நோக்கத்தில் மாணவர்கள் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதிப்பெண் தெரியாத நிலையிலும் கல்லூரிகளில் இடத்தை உறுதி செய்து கொள்ள "முன்பணம்' கொடுத்து பெயரை பதிவு செய்து கொள்ளும் வழக்கமான நடைமுறை ஏற்கெனவே தொடங்கி விட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக கணினி தொடர்புடைய பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக, கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்த சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு முதலே இந்த போக்கு தொடங்கிவிட்ட நிலையில், இந்த ஆண்டும் அதேநிலை தொடருவதோடு மெக்கானிக்கல் பிரிவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்து சிவில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் சுயநிதி பொறியியல் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

கணினி துறையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த ஆண்டு அந்த பாடப் பிரிவுகளில் அதிகமான இடங்கள் காலியாக இருந்தன. ஆனால் இந்த ஆண்டு அந்த நிலைமை மாற வாய்ப்பு உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் துறையில் சேர மாணவர்களிடம் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த ஆண்டைவிட நிலைமை மேம்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மெரைன் இன்ஜினியரிங் மற்றும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் உள்ள கல்லூரிகளில் அந்த பாடப் பிரிவுகளுக்குதான் அதிக கிராக்கி உள்ளது. அடுத்த நிலையில் மெக்கானிக்கல், சிவில் பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கவனிக்க வேண்டியவை: சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான அறிவுரைகளாக கல்வியாளர்கள் கூறுவது கவனிக்கதக்கவைகளாக உள்ளன.

முதலில் தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும், அங்கு தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் நேரில் கண்டறிய வேண்டும். கல்வித் தரம் குறித்து அங்கு பயிலும் மாணவர்களிடம் கேட்டறிந்து அதில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அந்த கல்லூரியில் சேர வேண்டும்.

கல்லூரிகளில் சேருவதற்கு முதலிலேயே உண்மைச் சான்றிதழ்களை கொடுக்க வேண்டாம். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிலை தெளிவாக இல்லாததால் அத்தகைய கல்வி நிறுவனங்களில் சேருவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் சேருவது பாதுகாப்பானது.

தமிழ்நாட்டில் தற்போது 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1.65 லட்சம் இடங்கள் உள்ளன.

கடந்த ஆண்டில் சுமார் 30,000 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு மேலும் சில புதிய கல்லூரிகள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. அந்த கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால் மேலும் 12,000 இடங்கள் கிடைக்கும்.

இந்த சூழ்நிலையில், விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் மூலம்

இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், விரும்பிய இடத்தில், விரும்பிய பாடத்தில் சேரும் எண்ணத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்தாலும் நன்கொடை விசயத்திலாவது உஷாராக இருக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் எந்த கல்லூரியும் அதிகமான நன்கொடை கேட்க வாய்ப்பில்லை. தென் மாவட்டங்களில் ஒரு சில கல்லூரிகள் நன்கொடை வசூலித்தாலும், அவை கடந்த காலத்தைவிட தற்போது குறைத்து வசூலிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளன. அரசு கட்டணத்தை (ரூ. 62,500) பெற்றுக் கொண்டு இடங்களை நிரப்பினால் போதும் என்ற நிலைதான் பெரும்பாலான கல்லூரிகளுக்கு உள்ளன. ஆதலால் கல்லூரி நிர்வாகம் கேட்கிற நன்கொடைகளை கொடுத்து ஏமாற வேண்டாம். நல்ல தரமான ஒரு சில கல்லூரிகள் மட்டுமே "கிராக்கி' உள்ள பாடப் பிரிவுகளுக்கு அரசு கட்டணத்தைவிட சற்று கூடுதலாக (ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.25 லட்சம் வரை) வசூலிக்கின்றனர். அதற்கு, இந்த ஆண்டு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக கல்லூரி நிர்வாகங்கள் கூறுகின்றன. கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை என்றால் கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற எந்த உத்தரவாதமும் கிடையாது.

பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. எனவே, இந்த ஆண்டு இடங்களை காலியாக விட்டு இழப்பை ஏற்படுத்திக் கொள்ளாமல் அனைத்து இடங்களையும் நிரப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சில கல்லூரி நிர்வாகங்கள் கணினி தொடர்புடைய பாடப் பிரிவுகளுக்கு அரசு கட்டணத்தைவிட குறைந்த கட்டணத்தில் கூட மாணவர்களை சேர்த்து வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.