அதுமட்டுமின்றி, தென் மாவட்டங்களில் உள்ள புறவழிச்சாலைகள் எல்லாம் வடக்கு-தெற்காக உள்ளன. வண்ணார்பேட்டை பாலமும் புறவழிச்சாலையில்தான் வருகிறது. ஆதலால் மாநகராட்சி நிர்வாகம் சொல்கிறபடி பாலத்தை வடக்கு-தெற்காக கட்டுவதே சரி என்ற வகையில் சென்னையில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளும் முடிவு செய்துவிட்டனர். ஆனால் இங்குள்ள நிலைமை வேறு, இங்கு வாகனப் போக்குவரத்து கிழக்க-மேற்காகத்தான் அதிகமாக இருக்கிறது. எனவே, போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வுகாண பாலத்தை கிழக்கு-மேற்காகத்தான் கட்ட வேண்டும், மூன்றில் ஒரு பங்கு வாகனப் போக்குவரத்து உள்ள வடக்கு-தெற்காக கட்டினால் பயன் ஏற்படாது என உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படாததாலும், காவல் துறை எடுத்த கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் முறையாக உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படாததும் பாலம் வடக்கு-தெற்காக அமைய காரணமாகி விட்டது என தகவல் அறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.