/

வீடு வீடாக ரேஷன் கார்டு சோதனை: கிராம மக்கள் அச்சம்

திருநெல்வேலி, ஆக. 12: குடும்ப அட்டைகளின் உண்மைத் தன்மையை கண்டறிய வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியில் நிலவும் குழப்பத்தால் கிராம மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த ஆய்வு குறித்து பொ

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:08 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, ஆக. 12: குடும்ப அட்டைகளின் உண்மைத் தன்மையை கண்டறிய வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியில் நிலவும் குழப்பத்தால் கிராம மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

 இந்த ஆய்வு குறித்து பொதுமக்களுக்கு தெளிவான விவரம் அறிவிக்கப்படாததால் குடும்ப அட்டை ரத்து செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சமே இந்த கொந்தளிப்புக்கு காரணம்.

 குடும்ப அட்டையானது அத்தியாவசியமான ஓர் ஆவணமாக கருதப்படுகிறது. அதில் போலிகள் ஏராளம். போலிகளை ஒழிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 போலி அட்டைகளை ஒழிக்க, குடும்ப அட்டைகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் வகையில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணியானது, 2-வது கட்டமாக 10 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இப்போது 3-வது கட்டமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8.53 லட்சம் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்யும் பணி ஆக.1-ம் தேதி தொடங்கியது. இப் பணியில் அரசுத் துறைகளைச் சேர்ந்த 1,410 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்க 169 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 ஆய்வு எந்த நாளில்? ஆய்வுப் பணியாளர்கள் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் வீடுகளுக்குச் சென்று குடும்பத் தலைவர் அல்லது வயதுக்கு வந்த உறுப்பினர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து குடும்ப அட்டையின் உண்மைத் தன்மையை கண்டறிந்து பதிவு செய்ய வேண்டும்.

 இப் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். இந்த மாதத்தில் 10 விடுமுறை நாள்கள் மட்டுமே உள்ளன. எனவே, ஒரு ஊழியர் சுமார் 605 குடும்ப அட்டைகளை, அதாவது நாளொன்றுக்கு 60 அட்டைகளை சரிபார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வேலைநாள்களில் அலுவலகப் பணி பாதிக்காமல் உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஊழியர்கள் களத்துக்குச் சென்று குடும்ப அட்டைகளை ஆய்வு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 இந்த ஆய்வை மேற்கொள்ள நகர்ப்புறங்களுக்கு அட்டைக்கு தலா ரூ. 5-ம், கிராமப்புறங்களுக்கு அட்டைக்கு தலா ரூ. 3-ம் ஊக்கத் தொகை உண்டு.

 எனவே, கிராமப்புறங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் அவரவர் விருப்பப்படி வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கிராம மக்கள் பகலில் வேலைக்கு சென்று விட்டு மாலையில்தான் திரும்பி வருவார்கள். செங்கோட்டை, தென்காசி போன்ற எல்லைப்புறப் பகுதி மக்கள் வார நாள்களில் கேரளத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு வார இறுதி நாள்களில்தான் சொந்த ஊருக்கு வருவார்கள். எனவே, அவர்களது குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், ஆய்வு செய்யும் ஊழியர் எப்போது வருவார் என்ற விவரமும் தெரிய வருவதில்லை.

 இதனால், தங்களது குடும்ப அட்டைகள் ஆய்வு செய்யப்படாமல் ரத்து செய்யப்பட்டு விடுமோ என அட்டைதாரர்கள் அச்சமடைந்துள்ளனர்.

 மேலும், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குடி பெயர்ந்து சென்றவர்கள் அட்டைகளில் முகவரி மாற்றத்தை செய்திருக்கா விட்டாலோ அல்லது அதுகுறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட ரேஷன் கடையின் பதிவேட்டில் பதியாவிட்டாலோ அட்டைகளை ஆய்வு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. எனவே, அந்த அட்டைகளும் ஆய்வில் இருந்து விடுபட்டு ரத்தாகும். அதை இந்த முதல் கட்ட ஆய்வு முடிவடைந்த பின்பு "மேல் முறையீட்டு மனு' மூலம் எளிதாக தீர்த்துக் கொள்ளலாம். அதற்கான மனுக்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலேயே கிடைக்கும். இந்த தகவல் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் இருப்பதும் அச்சத்துக்குக் காரணம்.

 ""குடும்ப அட்டைகளின் ஆய்வு முறையாக நடக்கவில்லை. இந்த ஆய்வு முடிவடைந்த உடன் கிராமப்புறங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் இசக்கிப்பாணடி (தென்காசி), ராமச்சந்திரன் (சங்கரன்கோவில்).

 மாவட்டத்தில் இதுவரையில் சுமார் ஒரு லட்சம் குடும்ப அட்டைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய அட்டைகளை ஆய்வு செய்யும் முன்பாக ஊழியர்கள் கிராமங்களுக்கு ஆய்வுக்கும் செல்லும் நாள் விவரத்தை அந்தந்த ஊராட்சிகள் மூலம் அறிவித்துவிட்டு சென்றால் குழப்பத்தைத் தடுக்க வாய்ப்பு உள்ளது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.