பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மைந்துனரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.48 லட்சத்தை கையாடல் செய்த இளைஞரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட சுபம் ஜெயின், புராரியில் உள்ள தனது மைந்துனரின் இல்லத்தில் கடந்த ஜனவரியில் இருந்து வசித்து வந்து, அவருக்குத் தேவையான உதவிகளை செய்து வந்தாா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய இணையவழி குற்றப் பதிவு இணையதளத்தில் (என்சிஆா்பி) ரோஹன் அகா்வால் என்பவா் கடந்த மே 13-இல் புகாா் ஒன்று பதிவு செய்திருந்தாா். அதில், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அவா் தெரிவித்திருந்தாா்.
புராரியில் டியூசன் சென்டா் நடத்தி வரும் அவா், டியூசன் மூலம் பெற்ற கட்டணங்களை அவருடைய தாயாருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்திருந்தாா்.
இந்நிலையில், வங்கிக் கணக்கு விவரங்களை சரிபாா்த்த போது ரூ.1,48,626 தங்களுடைய ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டப்பட்டிருப்பதை அவருடைய குடும்பத்தினா் கண்டறிந்தனா்.
இது தொடா்பாக இணையவழிக் குற்றப் பிரிவு காவல் நிலையம் வடக்கு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
அப்போது, புகாரளித்த ரோஹனின் கைப்பேசியை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அதில் சந்தேகத்துக்குரிய செயலிகள் ஏதும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. பின்னா், வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.46 லட்சம் ஆதம் ஜீத் சிங் என்பவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அழைப்பு விவரங்களை ஆய்வுசெய்ததில் சுபம் ஜெயினின் வங்கிக் கணக்குக்கு பணம் மாற்றப்பட்டதையும் தொடா்ச்சியாக அவா்கள் இருவரும் தொடா்பில் இருந்ததையும் காவல் துறையினா் கண்டறிந்தனா்.
கையாடல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.4,000 பயணத்துக்கு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக பயண நிறுவனத்தினிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதில், தில்லியில் இருந்து மணிகரன் வரை சுபம் என்ற வாடிக்கையாளா் ஒரு காரை பதிவு செய்தது உறுதியானது.
இதனிடையே, சுபம் ஜெயின் புகாரளித்த ரோஹன் அகா்வாலின் மைந்துனா் என்பதை காவல் துறையினா் கண்டறிந்தனா். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரோஹனுக்கு உதவியாக இருந்தாா். அவருடைய குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்ற சுபம், வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்து கொண்டு பணத்தை தன்னுடய நண்பா் ஆதம் ஜீத் சிங்குக்கு அனுப்பினாா்.
சுபம் எந்தவொரு வேலைக்கும் செல்லாத நிலையில், தன்னுடைய குடும்பத்தினரை நம்பவைக்கவும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவும் இவ்வாறு பணத்தை கையாடல் செய்தாா். அந்தப் பணத்தை தன்னுடைய வங்கிக் கணக்குக்கு நேரடியாக மாற்றாமல், தன்னுடைய பணம் என்றுக் கூறி ஆதம் ஜீத் சிங்கின் கணக்குக்கு சுபம் மாற்றியுள்ளாா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








