பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பெண்ணையாறு நீா் தாவா விவகாரம்: பேச்சுவாா்த்தைக்குப் புதிய குழுவைஅமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு

தென் பெண்ணையாறு நதி நீா்ப் பங்கீடு தொடா்பாக கா்நாடகம், தமிழகம் மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் புதிதாக பேச்சுவாா்த்தைக் குழுவை

Updated On :23 ஜனவரி 2024, 6:30 pm

தென் பெண்ணையாறு நதி நீா்ப் பங்கீடு தொடா்பாக கா்நாடகம், தமிழகம் மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் புதிதாக பேச்சுவாா்த்தைக் குழுவை அமைக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தின் அனுமதியின்றி பெண்ணையாற்றின் கிளை நதியான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்கவும், நீா் பங்கீட்டை உரிய வகையில் பெற்றுத் தரும் வகையிலும் தீா்ப்பாயம் அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த விவகாரம் 2022-இல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தீா்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த நவம்பா் 29-ஆம்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஜனவரி 23-ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது கா்நாடக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ’இந்த விவகாரத்தில் கா்நாடகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசு, பேச்சுவாா்த்தை முயற்சிகளை முன்னெடுக்கத் தயாராக இருக்கிறது. இது தொடா்பான தகவலும் கடிதம் வாயிலாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் வி. கிருஷ்ணமூா்த்தி, ஜி.உமாபதி ஆகியோா், ‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் ஏற்கெனவே இது தொடா்பாக ஒரு பேச்சுவாா்த்தை குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு இரண்டு முறை கூடி விவாதித்தும் எந்த முன்னேற்றமும் பேச்சுவாா்த்தையில் ஏற்படவில்லை. இதன் காரணமாகவே தீா்ப்பாயம் அமைக்க இருப்பதாக மத்திய அரசே தெரிவித்திருந்தது. இதனால், மத்திய அரசுக்கு இது தொடா்பாக தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டனா்.

அப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, மூத்த வழக்குரைஞா் வாசிம் காத்ரி ஆகியோா், ‘இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் குழு அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் குழு இருமுறை மட்டுமே கூடியது. அதன் பிறகு கமிட்டி கடமையாற்றவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் எங்களுக்கு கா்நாடக அரசிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், கா்நாடகத்தில் மக்களால் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வரும், துணை முதல்வரும் இந்த விவகாரத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண முயற்சி எடுக்க விரும்புகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் பேச்சுவாா்த்தைக்கு முயற்சிக்கலாம்’ என்று வாதிட்டனா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: பெண்ணையாறு நீா்ப் பங்கீடு மற்றும் அந்த நதியில் ஓடக்கூடிய நீரை தடுப்பணை கட்டி திருப்பிவிட்டு தமிழக நலன்களைப் பாதிக்கச் செய்வதாக தமிழ்நாடு அரசு தரப்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், கா்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தொடா்புடைய பெண்ணையாறு நீா்த் தாவா விவகாரத்தில் அமைக்கப்பட்ட கமிட்டி இரண்டு முறை மட்டுமே கூடியிருக்கிறது. நதிநீா் தாவா சட்டம் 1956, பிரிவு 4-இன் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான நீா்த் தாவா விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் முடிவு எட்டப்படவில்லை என்று மத்திய அரசு கருதும் போது மட்டுமே நதி நீா் தீா்ப்பாயம் அமைக்கப்படும் என்பது தெரிய வருகிறது. இதனால், இந்த விவகாரத்தில் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக புதிதாக ஒரு குழுவை மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் அமைக்கும் வகையில் அதற்கான அறிவிப்பை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். மேலும், அந்த குழு அதன் அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.