புது தில்லி, அக்.10: ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வலுக்கட்டாயமாக விற்பனை செய்ய நிர்ப்பந்தித்ததாக அப்போதைய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் டி.வி. தலைவர்-மேலாண் இயக்குநருமான கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும் ஞாயிற்றுக்கிழமை சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
அவர்களது வீடுகள், அலுவலகங்களில் திங்கள்கிழமை காலை 8 மணியிலிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
யார் மீது வழக்கு? 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அந்நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரனை, தயாநிதி மாறன் நிர்ப்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர், மாக்சிஸ் நிறுவனம் சன் டி.வி.யில் ரூ. 500 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கரன் கடந்த ஜூன் 6-ம் தேதி சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பின்னர் சி.பி.ஐ. தனது விசாரணையை துரிதப்படுத்தியது. இது தொடர்பாக மாறன் சகோதர்களிடம் செப்டம்பர் 15-ம் தேதி தில்லியில் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் தனது மத்திய அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான வலுவான ஆதாரங்களை மாக்சிஸ், தொலைத் தொடர்பு அமைச்சகம் ஆகியவற்றிடம் சி.பி.ஐ. சேகரித்தது. இந்நிலையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், ஆஸ்ட்ரோ இயக்குநர் ரால்ப் மார்ஷல் (மலேசியா), உஷாஹா தேகாஸ் குழுமத்தின் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் (மலேசியா) சன் டைரக்ட் (சென்னை), மாக்சிஸ் (மலோசியா), ஆஸ்ட்ரோ (பிரிட்டன்) உள்பட பெயர் தெரியாதவர்கள் என்று மொத்தம் 8 பேர் மீது 120-பி பிரிவின் கீழ் குற்றச் சதி செய்ததாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு "2 ஜி அலைக்கற்றை' வழக்குடன் இணைக்காமல் தனி வழக்காக சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
9 இடங்களில் சோதனை: இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை, ஆந்திரப் பிரதேசம், தில்லி ஆகிய மூன்று மாநிலங்களில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். சென்னை போட் கிளப்பில் உள்ள மாறன் சகோதரர்களின் வீடு, சன் டி.வி. அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்றன. தில்லியில் அக்பர் ரோட்டில் உள்ள தயாநிதி மாறன் வீடு மற்றும் மாக்சிஸ், ஆஸ்ட்ரோ நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு நான்கு அதிகாரிகள் தயாநிதி மாறன் வீட்டிற்குள் சென்றனர். வீட்டிற்குள் இருந்தவர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் தயாநிதி மாறன், அவரது மனைவி, நண்பர், வழக்குரைஞர், உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர். சோதனையின்போது இந்த வழக்குக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. மாக்சிஸ் நிறுவனத்தில் 26 சதவீதம் பங்குகளைப் பெற்றுள்ள பிரபல மருத்துவமனையின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் சதி செய்து பங்குகளைப் பெற்றதா என்பதை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்போது கைது?: இந்த வழக்கில் மாறன் சகோதரர்களை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்தது:
""திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் இந்த வழக்குக்குத் தேவையான பல முக்கிய ஆவணங்கள் சி.பி.ஐ.க்குக் கிடைத்துள்ளன. இதை அடிப்படையாக வைத்து மாறன் சகோதரர்கள் தனித்தனியாக விசாரணைக்கு அழைக்கப்படுவர். இதற்கான சம்மன் அவர்களுக்கு விரைவில் அனுப்பப்படும்.
இதன் பின்னர் இந்த எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ள மற்றவர்களையும் சி.பி.ஐ. அழைத்து விசாரணை நடத்தும். இதுவரை நடைபெற்ற முதல் கட்ட விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இதன் பின்னர் நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெறலாம். வழக்கில் எற்படும் முன்னேற்றத்தைத் தொடர்ந்து விசாரணைக்குப் பின்னரும் கைது செய்யப்படலாம். வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில் எங்களிடம் முக்கிய ஆவணங்கள் உள்ளன'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
சன் டி.வி.யில் இருந்து தயாநிதி மாறன் வீட்டிற்கு 323 தொலைபேசி இணைப்புகளைச் சட்ட விரோதமாக அளித்த குற்றச்சாட்டில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

