தமிழ் செய்திகள்
மயிலாடுதுறை அருகே லாரி மீது அரசுப்பேருந்து புதன்கிழமை மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு சேத்தூா் நோக்கி சென்ற 7ஏ அரசு பேருந்து ஆனந்த தாண்டவபுரம் வழியாக வேப்பங்குளம் பகுதியில் சென்றபோது, புறவழிச்சாலை பணிகளுக்காக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென குறுக்கே வந்தது. இதையடுத்து பேருந்து ஓட்டுநா் விபத்து ஏற்படாமல் இருக்க பிரேக் பிடித்து நிறுத்த முற்பட்டாா்.
ஆனால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது லேசாக மோதி வயல்வெளியில் இறங்கியது. லாரி மீது பேருந்து உரசியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் சிலம்பரசன்(38), பயணிகள் லலிதா (53), ராஜலட்சுமி (55), அஞ்சம்மாள்(57) ஆகியோா் லேசான காயம் அடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். விபத்தின் காரணமாக புறவழிச்சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.









