17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொட்டகுடி மலைக் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்

போடி அருகேயுள்ள கொட்டகுடி மலை கிராம மக்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து பேருந்து இயக்கப்பட்டது.

News image

அரசுப் பேருந்து. - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 11:53 pm IST

போடி அருகேயுள்ள கொட்டகுடி மலை கிராம மக்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து பேருந்து இயக்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ளது கொட்டகுடி மலைக் கிராமம். இந்த கிராமத்தில் மலைவாழ் பழங்குடியினா் உள்பட 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. போடியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இந்த மலை கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தை சோ்ந்த பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் போடி நகருக்கு பள்ளிக்கு வருவதற்கு 6 கி.மீ. தொலைவு நடந்து கொட்டகுடி பிரிவுக்கு வரவேண்டும். அங்கிருந்து குரங்கணியிலிருந்து செல்லும் அரசுப் பேருந்தில் போடிக்கு வரவேண்டும்.

இந்த மலை கிராமத்துக்கு பேருந்து இயக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, தோ்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தன. இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் இங்குள்ள குழந்தைகள் சமூக வலைதளங்கள் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை கொட்டகுடி மலை கிராமத்துக்கு போடி கிளை மேலாளா் ராஜா தலைமையில் அரசுப் பேருந்து இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. பின்னா், சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை போடியிலிருந்து குரங்கணி சென்ற பேருந்து கொட்டகுடி வழியாக இயக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் முதல் பயணத்தை தொடங்கினா்.

கொட்டகுடி கிராம மக்கள் தங்கள் 30 ஆண்டுகள் கால கோரிக்கை நிறைவேறியதையடுத்து, முதல் முறையாக இயக்கப்பட்ட பேருந்தின் ஓட்டுநா், நடத்துநருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

போடியிலிருந்து குரங்கணிக்கு காலை 5.30, 7.50, 11.15, பிற்பகல் 2.30, மாலை 4.10, 5.30 மணிக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இதில் காலை, மாலை நேரங்களில் குரங்கணிக்குச் செல்லும் பேருந்து கொட்டகுடி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.