/

மறுநடவு மானியச் சான்றிதழ் பெற ஏலக்காய் விவசாயிகள் அலைக்கழிப்பு: மானியத் தொகை திரும்ப அனுப்பப்படும் அபாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் மறு நடவுப்பணிகளுக்காக மத்திய அரசு வழங்கும் மானியத்தொகையை பெறுவதற்கான சான்றிதழை வழங்காமல் வட்டாட்சியர் அலுவலகங்கள்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:27 pm

செ.பிரபாகரன்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் மறு நடவுப்பணிகளுக்காக மத்திய அரசு வழங்கும் மானியத்தொகையை பெறுவதற்கான சான்றிதழை வழங்காமல் வட்டாட்சியர் அலுவலகங்கள் விவசாயிகளை அலைகழிப்பதாக புகார் எழுந்துள்ளது. காலக்கெடு முடிவடைய உள்ளதால் அத்தொகை திரும்ப அனுப்பப்படும் அபாயம் உள்ளது.
தேனி மாவட்டத்தை ஒட்ய இடுக்கி மாவட்டத்தில் உடும்பன் சோலை, பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி ஆகிய தாலுகா பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான ஹெக்டேர் நிலங்களில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலங்கள் வனப்பகுதியில் உள்ளதால் குத்தகை நிலங்களாகத்தான் இன்று வரை ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் பேர் வாழ்கின்றனர். இவர்கள்தான் ஏலக்காய் விவசாயத்தை பல தலைமுறைகளாக செய்து வருகின்றனர்.
ஏலக்காய்த் தோட்டங்களில் வேலை செய்பவர்களும் தமிழர்களே. இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய்கள்தான் உலகத்தரம் மிக்கவையாகவும், இந்திய நாட்டிற்கு அன்னிய செலவாணி அதிகம் ஈட்டித்தருவதாகவும் உள்ளது. இங்கு விளையும் ஏலக்காய் மத்திய அரசின் நறுமணப்பொருள்கள் வாரியத்தினரால் நடத்தப்படும் ஏலக்காய் ஏல மையங்களில் ( கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடி) ஆன் லைன் எனப்படும் மின் அஞ்சல் மூலம் ஏலமிடப்படுகின்றன.
தற்போது ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ள நிலையில் ரீ பிளாண்டேசன் எனப்படும் மறு நடவிற்கான வேலைகளையும் ஏலக்காய் விவசாயிகள் செய்து வருகிறார்கள். இதற்கு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 70 ஆயிரம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நறுமணப் பொருள்கள் வாரியம் மானியம் வழங்குகிறது. இதை தலா 35 ஆயிரம் வீதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இந்த மானியத்தை பெறுவதற்கு ஏலக்காய் விவசாயிகள் பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம், இடுக்கி தாலுகாக்களில் உள்ள வட்டாட்சியரிடம் ஏலக்காய் விவசாயம் செய்துள்ள நிலம் என்று சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
இச்சான்றிதழைப் பெற ஜனவரி மாதமே விவசாயிகள் விண்ணப்பித்து உள்ளபோதும் இன்றுவரை சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மானியத்தொகை பெறுவதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில் உள்ளதால் வந்த மானியத்தொகையை, திரும்ப மத்திய அரசுக்கே அனுப்பும் அபாயம் இருந்து வருகிறது.
ஏற்கெனவே ஏலக்காய் விலை குறைவால் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், மானிய தொகை கிடைத்தால் ஓரளவு நஷ்டத்தை ஈடுகட்டலாம். ஆனால் சான்றிதழ் கிடைக்க வில்லையே, என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளனர்.
இது பற்றி கம்பத்தை சேர்ந்த ஏலக்காய் விவசாயி கூறியது:
இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறார்கள், மத்திய அரசின் மானியங்களை பெற வருவாய்த் துறையினர் சான்றிதழ்களை தராமல் இழுத்தடிப்பது, ஏலக்காய் விவசாயிகளிடம் மட்டும் பாரபட்சம் காண்பிப்பது போல் தெரிகிறது. மானிய தொகையை, மார்ச் மாதத்திற்குள் பெற்றுவிட வேண்டும், இல்லையென்றால் திரும்ப அனுப்பப்பட்டுவிடும். ஏற்கெனவே விலை குறைவால் அவதிப்படும் ஏலக்காய் விவசாயிகளின் நலன் கருதி, ஏலக்காய் விளையும் நிலம் என்ற சான்றிதழ்களை பெற தமிழக அரசு, தேனி மாவட்ட நிர்வாகம், கேரள அரசுக்கும், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.