/

கட்சிக் கொடியே இல்லாத ஒக்கரைப்பட்டி!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ளது ஒக்கரைப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500 வீடுகளில் 3000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:05 pm

எஸ். பாண்டி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ளது ஒக்கரைப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500 வீடுகளில் 3000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இக்கிராமத்தில் எந்த கட்சியின் கொடி மரமோ, விளம்பரப் பதாகைகளோ, சுவரொட்டிகளோ அல்லது திரைப்பட நடிகரின் கொடியோ, சுவரொட்டிகளோ ஒட்டக்கூடாது என்ற வித்தியாசமான கொள்ளை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால், கிராமத்தில் பிரச்னை எழும் என்றும், அதன்மூலம் தங்களுக்குள் பகைமை வளர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னோர்களால் இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்கொள்கை தற்போதும் இளைய தலைமுறையினரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியப்படத்தக்கது.

அதேபோல், இக்கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி என்பதே கிடையாது. ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து தேர்ந்தெடுக்கும் வேட்பாளரே ஊராட்சிமன்றத் தலைவர். அவரை எதிர்த்து யாரும் நிற்பது கிடையாது. அதனால் அவர் போட்டியின்றி இந்த கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

அதேநேரம், தேர்தலில் தங்களுக்கு விருப்பமான கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வாக்களிக்கலாம்.

அதில் யாரும் தலையிடுவது இல்லை. மேலும், வேட்பாளர்கள் இப்பகுதியில் பிரசாரம் செய்வதற்கும் எந்தத் தடையும் இல்லை.

இது குறித்து, இக்கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஆதிமூலம் (70) கூறியதாவது: இங்குள்ளவர்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எங்களது முன்னோர்கள் பின்பற்றியதை, தற்போது வரை நாங்களும் பின்பற்றி வருகிறோம் இதனால், எங்கள் கிராமத்தில் எந்தப் பிரச்னையுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் என்றார்.

-எஸ்.பாண்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.