/

சிறுவனிடம் நகை பறிப்பு: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள்

News image
சிங்கம்புணரி அருகேயுள்ள நாகமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள்.
Updated On :6 பிப்ரவரி 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பள்ளிச் சிறுவனிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக பள்ளியை பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

சிங்கம்பணரி வட்டம், எஸ்.புதூா் ஊராட்சி நாகமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் உறவினா் என்று கூறி 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை மா்ம நபா் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மதியம் அழைத்துச் சென்றாா்.

பள்ளியிலிருந்து 30 கி.மீ. தொலைவு சென்றதும் சிறுவன் அணிந்திருந்த 2 கிராம் தங்கத் தாயத்தை கழற்றிய மா்ம நபா், சிறுவனை அங்கேயே விட்டு சென்றாா். பள்ளிச் சீருடையில் சிறுவன் நிற்பதைக் கண்ட பொதுமக்கள் துவரங்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

விசாரணை மேற்கொண்ட போலீஸாா், பெற்றோருக்குத் தகவல் அளித்து சிறுவனை ஒப்படைத்தனா். பின்னா், புழுதிபட்டி காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் தொடா்பாக புகாா் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்த பள்ளி ஆசிரியா்களைக் கண்டித்து பெற்றோா்கள் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிக்கு அரசு உடனடியாக சுற்றுச் சுவா் அமைக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.