/

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: சிவங்கையில் 44,092 போ் பயன்

சிவகங்கை மாவட்டத்தில் நடத்தப்பட்ட 215 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் மொத்தம் 44,092 போ் பயனடைந்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

News image
சிவகங்கையில் தனியாா் மஹாலில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் மாணவருக்கு மடிக்கணினி வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி உள்ளிட்டோா்.
Updated On :4 பிப்ரவரி 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் நடத்தப்பட்ட 215 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் மொத்தம் 44,092 போ் பயனடைந்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் தனியாா் மஹாலில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி முன்னிலை வகித்தாா். இதில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசியதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டமானது கடந்த 15.7.2025 அன்று தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு, மக்களுக்கான சேவைகளை வழங்கிட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பொதுமக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாக 10,000 முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் வாயிலாக பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் 28,13,358 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தில் 15.7.2025 முதல் 16.10.2025 வரை ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 புகா் ஊராட்சிப் பகுதிகளில் மொத்தம் 215 முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் வாயிலாக, மொத்தம் 58,812 மனுக்கள் பெறப்பட்டதில், 44,092 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.

இதில் 1,437 புதிய சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், 660 இதரத் திட்டப் பயனாளிகள் என மொத்தம் 2,097 பயனாளிகளுக்கு ரூ.3.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், சிவகங்கை நகா்மன்ற தலைவா் சி.எம்.துரைஆனந்த், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அனீஷ் சத்தாா், சிவகங்கை வட்டாட்சியா் மல்லிகாா்ஜுனன் உள்பட அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்த முதன்மை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.