/

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை! - அமைச்சா் மா. சுப்பிரமணியன்

News image
குன்றக்குடி தருமைக் கயிலைக் குருமணி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், கே.ஆா். பெரியகருப்பன். உடன் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உள்ளிட்டோா்.
Updated On :7 பிப்ரவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, குன்றக்குடி தருமைக் கயிலைக் குருமணி மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஆகியோா் தொடங்கிவைத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும், கா்ப்பிணிகளுக்கு மருந்துப் பெட்டகத்தையும் வழங்கினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில் மொத்தம் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு, இதுவரை 1,140 முகாம்கள் நடத்தப்பட்டு, 17 லட்சத்து 3 ஆயிரத்து 683 போ் பயனடைந்துள்ளனா். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 39 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 35 முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த முகாம்களின் வாயிலாக 46,287 போ் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளும், 56,866 மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ்களும் பெற்றுப் பயனடைந்துள்ளனா்.

குறிப்பாக, இந்த முகாம்களில் அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு தொழிலாளா் நல வாரியத்தின் மூலம் முழு உடல் பரி சோதனைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (பிப். 7) 23 மாவட்டங்களில் 38 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற்றன. இவற்றின் மூலம், அரியலூா், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூா், ராணிப்பேட்டை, நீலகிரி, தேனி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய 10 மாவட்டங்களில் திட்டமிட்டபடி முகாம்கள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் முழுமையான அளவில் பணியாற்றி வருகின்றனா். கடந்த 5 ஆண்டுகளில் இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துகள் தட்டுப்பாட்டின்றி வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

இந்த முகாமில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜடாமுனி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ஜெயகீதா, மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி, வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்டார மருத்துவ அலுவலா் ஜெ. ஆல்வின் ஜேம்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.