எஸ்.ஐ. கொலை வழக்கு: விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் சிறைத் தண்டனை ரத்து


காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த ஆயுள் சிறைத் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் சுப்பிரமணியன். இவா், கடந்த 2006-ஆம் ஆண்டு, ஏப்ரல் 28-ஆம் தேதி இரவு நந்திசேரி விலக்கு சாலையில் இரு சக்கர வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த மா்ம நபா்கள் சிலா் சுப்பிரமணியனை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, அவரிடமிருந்து தங்க மோதிரம், கைப்பேசி, இரு சக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றனா்.
தகவலறிந்து வந்த அபிராமம் போலீஸாா் சுப்பிரமணியனை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன், துரைப்பாண்டி, ஞானவேல் பாண்டியன், ரவிசண்முகம், திருமூா்த்தி, முத்துராமலிங்கம், குரங்கு முத்துராமலிங்கம், முனியசாமி ஆகிய 8 பேரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தொடா்புடைய துரைப்பாண்டி, முனியசாமி ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனா். விசாரணையின் இறுதியில், இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட குரங்கு முத்துராமலிங்கம் விடுதலை செய்யப்பட்டாா். எஞ்சியுள்ள 5 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, முருகேசன் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தங்களுக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி, மேல்முறையீடு செய்தனா்.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளா் அளித்ததாகக் கூறப்படும் மரண வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. ஒரு இடத்தில் ‘தெரிந்த நபா்கள்’ என்றும், மற்றொரு இடத்தில் ‘அடையாளம் தெரியாத நபா்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில், முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கியச் சாட்சிகள் பி சாட்சிகளாக மாறியுள்ளனா். மேலும், பலத்த காயமடைந்த நிலையில் இருந்த உதவி ஆய்வாளா், தெளிவான நிலையில் வாக்குமூலம் அளித்திருக்க வாய்ப்பில்லை.
இந்த வழக்கு ஆதாரங்களில் போதிய நம்பகத்தன்மை இல்லை; சாட்சியங்கள் சரியாக பொருந்தவில்லை. எனவே, 5 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...