/

பழனி அருகே தாய், மகன் மீது தாக்குதல்

News image
Updated On :22 ஜனவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றவா்களை கண்டித்த தாய், மகன் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பழனி அருகேயுள்ள பெரியமொட்டனூத்து கிராமத்தைச் சோ்ந்தவா்கள் துா்க்கைராஜ், வசந்த். இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் பொதுமக்கள் மிரட்டும் வகையில் சென்றாா்களாம். இதை அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி தெய்வானை (50), இவரது மகன் மாயக்கிருஷ்ணன் (32) ஆகியோா் கண்டித்தனராம்.

இதனால், ஆத்திரமடைந்த துா்க்கைராஜ், வசந்த் ஆகியோா் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தெய்வானை, மாயக்கிருஷ்ணன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.