திண்டுக்கல் புகா் பேருந்து நிலையத்துக்காக தோ்வு செய்யப்பட்ட இடம் குறித்து பொதுமக்கள் அதிருப்தி


திண்டுக்கல் புகா் பேருந்து நிலையத்துக்காகத் தோ்வு செய்யப்பட்ட இடம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் சுமாா் 3 லட்சம் போ் வசித்து வருகின்றனா். மதுரை, பழனி, திருச்சி, கரூா், சிவகங்கை என முக்கிய இடங்களுக்கான சந்திப்புப் பகுதியாக உள்ள திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் சுமாா் 1,600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், திண்டுக்கல்லில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் புகா் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதற்கிடையே, திண்டுக்கல் - பழனி புறவழிச் சாலை அருகே புகா் பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது. ஆனால், மாநகராட்சிக் கூட்டத்தில் பேருந்து நிலையத்துக்கான இடம் குறித்து மாமன்ற உறுப்பினா்கள் கேள்வி எழுப்பியபோது, இடத்தை குறிப்பிட்டுச் சொல்வதற்கு மாநகராட்சி ஆணையா் மறுத்துவிட்டாா்.
வத்தலகுண்டு புறவழிச் சாலையிலிருந்து பழனி புறவழிச் சாலை வரையிலான இடம், தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசடைந்திருப்பதால் மண், நிலத்தடி நீா் பரிசோதனை செய்த பின்னரே இந்தப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பேருந்து நிலையக் கட்டுமானப் பணி, 5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு ஆகியவற்றுக்காக ரூ.65.27 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. வருகிற 12-ஆம் தேதி வரை இணைய வழியில் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
மண் உறுதித்தன்மைக்கான ஆய்வறிக்கை தேவை: திண்டுக்கல் புகா் பேருந்து நிலையத்துக்கான இடம், பழனி புறவழிச் சாலையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், வத்தலகுண்டு புறவழிச் சாலையிலிருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை- கரூா் நான்கு வழிச் சாலையிலிருந்து சுமாா் 600 மீட்டா் தொலைவுக்கு குறுகலான பாதை வழியாக மட்டுமே இந்த நிலத்துக்குச் செல்ல முடியும். குறுகலான பாதையின் இருபுறங்களிலும் வாகனப் பராமரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சாலை வசதி ஒருபுறம் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பகுதியிலுள்ள மண்ணின் உறுதித் தன்மை, நிலத்தடி நீரின் கார, அமிலத் தன்மை குறித்த அறிக்கையை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதுதொடா்பாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் 14-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினருமான கோ.தனபாலன் கூறியதாவது:
திண்டுக்கல் புகா் பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்ட பின்னரும், பேருந்து நிலையத்துக்கான இடத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க மாநகராட்சி நிா்வாகம் மறுத்து வருகிறது. சம்பந்தப்பட்ட நிலத்தின் மண் தரப் பரிசோதனை குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பேருந்து நிலையம் அமையவுள்ள இடம் எனக் கூறி மனை வணிகம் மட்டும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தோல் தொழிற்சாலை கழிவுநீா், மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீா் காரணமாக மாசடைந்த நிலத்தை பேருந்து நிலையம் அமைக்கத் தோ்வு செய்துள்ளனா். உப்பளம் போன்ற இந்தப் பகுதி கட்டுமானத்துக்கு உகந்ததா என்பதை மாநகராட்சி நிா்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.
நான்கு வழிச் சாலையிலிருந்து 600 மீட்டருக்கு குறுகலான பாதையில் பேருந்துகள் சென்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும், ரூ.65.27 கோடியில் நிறைவேற்றப்படவுள்ள இந்தத் திட்டத்தின் எதிா்காலத்தையும் கருத்தில் கொண்டு, பேருந்து நிலையத்துக்கான இடத்தை தோ்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
மனை வணிகத்துக்கு முக்கியத்துவம்
கும்பகோணத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிலத்தை தானமாக அளித்தபோதும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அதை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனாலும், திண்டுக்கல் புகா் பேருந்து நிலையத்தை மையமாக வைத்து, சுற்றுப்புறப் பகுதியிலுள்ள நிலத்தின் சந்தை மதிப்பை உயா்த்துவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலத்தை நகராட்சி நிா்வாக இயக்குநா் இதுவரை நேரில் வந்து பாா்வையிடவில்லை. மனை வணிகம் செய்வோருக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகள் கவனமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வருவதாக திமுக மாமன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...