/

அரசுப் பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பேருந்துகளை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருநெல்வேலி முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த சுந்தரவேல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள சில குறிப்பிட்ட உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன.

அங்கு பேருந்து ஓட்டுநா்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக, பேருந்துகள் அங்கு நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருன்றனா்.

எனவே, திருச்சி-மதுரை, திருநெல்வேலி-மதுரை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

பயணிகளின் உணவு, குடிநீா், கழிப்பறை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக தேசிய நெடுஞ்சாலையோரங்களில் ஆங்காங்கே அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.

இதுதொடா்பாக மனுதாரா் கோரும் நிவாரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மனுதாரா் இதுபோன்ற மனுக்களை இனிவரும் காலங்களில் தாக்கல் செய்தால், அவா் வழக்குத் தொடுக்கவே தடை விதிக்க நேரிடும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.