ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குற்றவாளிகளைக் கண்டறிவதில் தாமதம்?

ராமநாதபுரம்,மே 9: ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு பல்வேறு நகைக்கடைகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது. ராமநாதபுரம் நகைக்கடை வீதியில் 4-1-2011-ல் ஒ

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:18 pm

சி.வ.சு. ஜெகஜோதி

ராமநாதபுரம்,மே 9: ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு பல்வேறு நகைக்கடைகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது.

ராமநாதபுரம் நகைக்கடை வீதியில் 4-1-2011-ல் ஒரு நகைக்கடையில் 75 கிராம் எடையுள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள 8 தங்க டாலர்கள் திருடு போனது. அதே நகைக்கடை வீதியில் உள்ள மற்றொரு கடையில் 13-6-2011 அன்று ரூ.2.25 லட்சம் மதிப்பிலான ஒரு தங்க பிஸ்கட் திருடு போனது. இவ்விரு நகைக்கடைகளிலும் இருந்த ரகசிய கேமராவில் இருவர் கடைக்குள் வந்து கடையில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டே தங்க நகைகளை திருடுவது பதிவாகியுள்ளது.

இவ்விரு கடையின் உரிமையாளர்களும் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு கடைகளிலும் ஒரே தோற்றம் உடைய இருவர் நகைகளை திருடுவது ரகசிய கேமராவில் பதிவாகி இருந்தாலும் ஒராண்டாகியும் இன்றுவரை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

மேலும் 8-7-2011 அன்று ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் 79.970 கிராம் எடையும் ரூ.2.25லட்சம் மதிப்பும் உடைய ஒரு தங்க செயின் திருடு போனது. இதுதொடர்பாகவும் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க 3 பெண்கள் கடைக்குள் ஒன்றாக வந்து நகையை திருடுவது இக்கடையில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அண்மையில் எஸ்.பி.அலுவலகத்தில் நகை வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அனைத்து நகைக்கடைகளிலும் ரகசிய கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும் என்றார்கள். அக்கூட்டத்திலேயே கேமரா பொருத்தப்பட்டிருந்த நகைக்கடைகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் ஓராண்டுக்கு மேலாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் இருப்பதை நினைவு படுத்தினோம். விரைவில் கைது செய்வதாக சொன்னார்களே தவிர யாரையும் கைது செய்யவில்லை.

2-2-2011-ல் சாயல்குடியில் ஒரு நகைக்கடையின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் பணம் உள்பட மொத்தம் ரூ.84 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அக்கொள்ளைச் சம்பவத்திலும் குற்றவாளிகள் இதுவரை கைதாகவில்லை.

2009-ம் ஆண்டு ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள நகைக்கடையின் மேற்புறத்தை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவத்திலும் தொடர்புடைய குற்றவாளிகளை திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை கண்டுபிடித்து நகைகளையும் மீட்டுக் கொடுத்தது.

முக்கியக் கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து பாராட்டு பெற்ற ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.

இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி.மகேஷ்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

ரகசிய கேமராக்களில் பதிவாகி இருந்தபடி திருடியவர் யார் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. ஆனால் அவரது பெயர் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் தான் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

ராமநாதபுரத்திலும், சிவகாசியிலும் உள்ள நகைக்கடைகளில் நகைகளை திருடியவர்களின் படங்கள் ரகசிய கேமராக்களில் பதிவானபடி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

எனவே கேமராக்களில் பதிவாகி இருந்த விவரங்களை குறுந்தகடுகளாகவும்,புகைப்படங்களாகவும் எடுத்து மொத்தம் 101 காவல் நிலையங்களுக்கு அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறு அனுப்பி வைத்துள்ளோம். எப்படியும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றார் எஸ்.பி. மகேஷ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.