நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உர மானியத்தில் மத்திய அரசின் முடிவு: உணவுப் பொருள்கள் உற்பத்தி குறையும் அபாயம்!

ஈரோடு, மே 3: உர மானியம் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவு உணவுத் தேவைக்கு இந்தியா சில ஆண்டுகளில் வெளி நாடுகளின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையை நோக்கித் தள்ளப்படும் சூழலை உருவாக்கியு

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:25 pm

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு, மே 3: உர மானியம் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவு உணவுத் தேவைக்கு இந்தியா சில ஆண்டுகளில் வெளி நாடுகளின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையை நோக்கித் தள்ளப்படும் சூழலை உருவாக்கியுள்ளது.

 விவசாயத்தை பொறுத்தவரை தண்ணீருக்கு அடுத்தபடியாக மிக முக்கிய மூலப்பொருளாக உரங்கள் உள்ளன. இயற்கை உரங்களின் உற்பத்தி வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையிலும், நாட்டின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய குறைந்த அளவு நிலத்தில் அபரிமிதமான உற்பத்தியைப் பெறவும் உரங்கள் கை கொடுக்கின்றன.

 இந்தியாவை பொறுத்தவரை, விவசாயத்தை இரண்டாம் நிலை தொழிலாகச் செய்யும் பெரும் பண முதலைகளைத் தவிர, பிழைப்புக்காக விவசாயம் செய்யும் அனைவரும் இன்னும் கடன்காரர்களாகவே உள்ளனர். விவசாயிகளின் சுமையில் அரசும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் உர மானியம் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 இந்த மானியத்தை கடந்த மார்ச் மாதம் வரை, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கியது. இதன் மூலம் போக்குவரத்துச் செலவைக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மானியம் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடி செலவாகிறது என்று கூறி, இந்த மானியத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.

 உரமானியத்தை சீரமைக்க கணினி ஆலோசகரான நந்தன் நில்கேனி தலைமையில் மத்திய அரசு குழு அமைத்தது. உரமானியத்தை ரூ.1.20 லட்சம் கோடியிலிருந்து ரூ.50 ஆயிரம் கோடியாக குறைப்பதாக உறுதி கூறியுள்ள நில்கேனி, அரசுக்கு சில பரிந்துரைகளை கடந்த ஆண்டில் அளித்தார்.

 இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மானியத் திட்டத்தில் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் படி, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்றும், இதற்காக வருவாய் துறையின் சான்று அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிக்கும் வேளாண்மை துறை பரிந்துரைப்படி உரத்திற்கு மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ஏடிஎம் அட்டை போன்று அடையாள அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 புதிய மானியத் திட்டத்தில், டிஎபி டன் ஒன்றுக்கு ரூ.18,474, பொட்டாஷ் டன் ஒன்றுக்கு ரூ.14,447, சூப்பர் பாஸ்பேட் டன் ஒன்றுக்கு ரூ.4,891 மானியம் அளிக்கப்படும். உரம் தேவைப்படும் விவசாயிகள், அடையாள அட்டையுடன் கடைகளுக்குச் சென்று, மானியம் போக மீதிப் பணத்தைக் கொடுத்து உரத்தை வாங்கிக்கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் உரம் தேவைப்படுபவர்கள் மானியம் இல்லாமல் முழு தொகையினை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

 உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம், புதிய மானிய திட்டத்தின் படி மொத்த விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும். புதிய மானியத் திட்டத்தில் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமும் நடப்பு நிதி ஆண்டு மட்டுமே செயல்படுத்தப்படும். 2012-2013 நிதி ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மட்டுமே மானியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது 10 ஏக்கருக்கும் மேல் நிலமுள்ள விவசாயிகளுக்கு உர மானியம் கிடைக்காது.

 இந்தியாவின் மொத்த விவசாயத்தில் ஏறத்தாழ 75 சத அளவு விவசாயம் கிணற்றுப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 10 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் கிணற்றுப் பாசனத்தை மட்டுமே அடிப்படை ஆதாரமாகக் கொண்டுள்ள 20 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளும், கந்துவட்டிக் கொடுமையால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் பல மாநிலங்களில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

 இத்தகைய அவல நிகழ்வுகள் தொடரும் இந்த நாட்டில் 10 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு மானியம் கிடையாது என்ற வரைமுறை விவசாயம் செய்ய வேண்டாம் என்று அரசு வெளிப்படையாகச் சொல்லமுடியாமல், இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. 1970-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயத்தின் பங்களிப்பு 19 சதம் ஆனால் தற்போது 5 சதமாகக் குறைந்துள்ளது. உணவுப்பொருட்களில் பெரும்பாலனவை கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. விவசாய உற்பத்தி குறைந்து போனதே இதற்குக் காரணம். இந் நிலையில் உர மானியத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசின் அணுகுமுறைகள், உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய ஒரு தனி துறையை உருவாக்கும் நிலைக்கு கொண்டுசென்றுவிடும்.

 இதுகுறித்து, விவசாயிகள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் சுபி.தளபதி தெரிவித்தது: தங்கத்தின் விலை போன்று உரத்தின் விலையும் நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. புதிய மானியத் திட்டத்தில் தோட்டக்கலை துறை பயிர்களுக்கு மானியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகம் உள்ள தென்னை மரங்களும் தோட்டக்கலைத்துறை பயிர் வகையில்தான் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கும் உர மானியம் வழங்குது குறித்து அறிவிக்க வேண்டும்.

 உர மானியத்தில் சீர்திருத்தம் தேவை, அதே சமயத்தில் சாதாரண விவசாயிகள் பாதிப்படையக்கூடாது. 20 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் மானியம் தொடர வேண்டும். இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் 30 சத அளவு கூடுதலாக உரம், மானிய விலையில் வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். உர மானியம் குறித்து அரசு இறுதி முடிவு செய்யும் முன்பு விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த முன்வர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.