நோய்த் தடுப்பு நிதி முறையாகச் செலவிடப்படுமா?
மதுரை, அக். 18: தமிழகத்தில் நோய்த் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சுகாதாரக் குழு நிதி உள்ளிட்டவை முறையாகச் செலவிடப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மாநிலத்தில் 1,531 அரசு ஆரம்பச் ச


மதுரை, அக். 18: தமிழகத்தில் நோய்த் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சுகாதாரக் குழு நிதி உள்ளிட்டவை முறையாகச் செலவிடப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மாநிலத்தில் 1,531 அரசு ஆரம்பச் சுகாதார மையங்கள் உள்ளன. 385 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றை மேம்படுத்த தேசிய சுகாதார இயக்கம் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியை முறையாகச் செலவிட நோயாளிகள் நலவாழ்வுச் சங்கம் மற்றும் வட்டார சுகாதார மையம், கிராமநல மற்றும் சுகாதாரக் குழுக்கள் என்ற அமைப்புகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் நோயாளிகள் நலவாழ்வுச் சங்கம் மூலம் ஆண்டுக்கு ரூ. 1.25 லட்சம் அளிக்கப்படுகிறது.
இதில் நோயாளிகள் நலத்திட்டத்துக்கு ரூ. 50 ஆயிரம், மருத்துவக் கட்டடம் பராமரிப்புக்கு ரூ. 50 ஆயிரம் செலவிடலாம். மேலும் ரூ. 25 ஆயிரத்தை அங்குள்ள டாக்டர், செவிலியர் குழுவினர் தேவைக்கு ஏற்ப தாங்களாகவே நேரடியாகச் செலவிடலாம் என்கிறார்கள் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள்.
வட்டார சுகாதார மையத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1.75 லட்சம் அளிக்கப்படுகிறது. இதையும் அந்தந்த வட்டார சுகாதாரக் குழுவினர் மூலம் மருத்துவமனை மேம்பாட்டுக்குச் செலவிடலாம்.
இதைத் தவிர்த்து ஒவ்வோர் ஊராட்சியிலும் கிராம நல மற்றும் சுகாதாரக் குழு நிதியும் அளிக்கப்படுகிறது. இந்நிதி ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம்.
இந்நிதியை ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர்கள் இணைந்து குழுவாகச் செயல்பட்டு செலவழிக்க வேண்டும் என விதி உள்ளது.
இந்நிதியில் அவசரத் தேவைக்கு ரூ. 10 ஆயிரம் செலவிடலாம். அவசர காலத்தில் நோயாளிகளைக் கொண்டு செல்ல வாகனச் செலவு, நோய் தடுப்பு விழிப்புணர்வு என செலவிடப்பட இந்நிதி வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு வகையில் ஆண்டு தோறும் கிராமப்புறங்களுக்காக மாநில அளவில் ரூ. 15 கோடிக்கும் மேலாக சிறப்பு நிதி அளிக்கப்படுகிறது.
ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மேஜை, நாற்காலி, குடிநீர் வசதி என அடிப்படைத் தேவைகளுக்கு அரசு உயரதிகாரிகள் ஒப்புதலைப் பெற காலதாமதமாகும் என்பதாலேயே சிறப்பு நிதிகள் அளிக்கப்படுகின்றன.
ஆனால், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறிப்பிட்ட ஆரம்பச் சுகாதார மையங்களில் கழிப்பறை, நோயாளிகளுக்குக் குடிநீர் போன்ற அவசியமான வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. கிராமப்புற சுகாதாரக் குழுக்களை கண்காணிக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சுகாதார நலச்சங்கம் உள்ளது.
ஆனால், பணிப்பளுவால், மாவட்ட ஆட்சியர்களால் நேரடி கண்காணிப்பில் ஈடுபடமுடியாத நிலை ஏற்படுகிறது. சுகாதார நிதி குறித்து ஊராட்சித் தலைவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை.
இதனால் நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்ற கண்காணிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆவண அடிப்படையில் நிதியை செலவிட்டதாகக் கணக்குகாட்டும் போக்கு அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய் தடுப்புக்காக, மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்படும் பல கோடி ரூபாய் நிதியும் முறையாகச் செலவிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
சிக்குன் குனியா நோய்த் தடுப்புக்காக கிராமங்கள் தோறும் தாற்காலிகப் பணியாளர்களை நியமிக்கவும், கொசு ஒழிப்பு மருந்தைத் தெளிக்கவும் நிதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான கிராமங்களில் இப்பணிகள் முறைப்படி நடைபெறவில்லை என்பதே உண்மை.
ஏழை, எளியவர்கள் நலனைக் கருத்தில் கொண்டுதான் அரசு சிறப்புக் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் நிதியைச் செலவழிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஆனால், அதைச் செயல்படுத்தும் அதிகாரிகள் தவறு செய்வதால் அத்திட்டம் மக்களுக்குப் பயன்படாமல் போகிறது என்றும் ஆளும் கட்சியினரே வருத்தப்படுகின்றனர்.
எனவே சுகாதாரத் திட்டத்தில் அரசு அளிக்கும் சிறப்பு நிதியை முறையாகச் செலவிடத் தேவையான நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுக்கவேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...