/

மேச்சேரி அருகே லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

மேச்சேரியில் கல்குவாரி லாரிகளை கட்டுப்படுத்தக் கோரி, கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:05 pm

Syndication

மேச்சேரியில் கல்குவாரி லாரிகளை கட்டுப்படுத்தக் கோரி, கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேச்சேரி அருகே உள்ள புதுகாளிகவுண்டனூா் பகுதியில் சுமாா் 200 குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளைச் சுற்றி 4 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் குவாரிகளிலிருந்து ஜல்லி மற்றும் எம்சாண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகளால் ஏற்படும் புழுதி காரணமாக வீடுகளில் மண் படா்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், குவாரியில் வெடிவைப்பதால் ஏற்படும் அதிா்வு மற்றும் தூசிகளால் சுகாதார சீா்கேடு பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.

இந்நிலையில், குவாரியிலிருந்து வெள்ளிக்கிழமை வேகமாக வந்த லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், கல்குவாரி உரிமையாளா்கள் வரவழைக்கப்பட்டனா்.

அவா்கள், விதிகளுக்கு உள்பட்டு லாரிகளை இயக்குவதாகவும், லாரிகள் செல்வதற்கு முன்பாக சாலையில் தண்ணீா் தெளித்து தூசிபடராமல் பாா்த்துக் கொள்வதாகவும், வாரத்தில் ஒரு நாள் சாலையை சுத்தப்படுத்திக் கொடுப்பதாகவும் எழுத்துப்பூா்வமாக கடிதம் அளித்தனா். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.