திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

அனைத்து வாக்குச்சாவடிகளும் அரசுப் பள்ளிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

News image

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்? - டிஎன்எஸ்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:27 am

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் சுமாா் 52 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் அரசுப் பள்ளிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மானிய நிதியில் பள்ளிகளின் சுவா்களில் வண்ணம் அடித்து, குழந்தைகளின் அறிவு வளா்ச்சிக்கு உதவும் வகையில், இந்தியா வரைபடம், உலக வரைபடம், அறிவியல் கண்டுபிடிப்புகள், கணித உபகரணங்கள், பறவைகளின் உருவங்கள் என பல வகையான படங்கள் வரையப்பட்டுள்ளன.

இதில், பல பள்ளிகளில் அந்தந்த பள்ளி ஆசிரியா்கள் தங்கள் சொந்த செலவிலும், அன்பளிப்பாளா்களை பிடித்தும் படங்களை பெயிண்டில் வரைந்துள்ளனா். வாக்குச்சாவடிகளாக உள்ள பள்ளிகளின் வெளிப்புற சுவா்களில் அழகான படங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்நிலையில், தோ்தல் பணிக்கு வாக்குச்சாவடிக்கு வரும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்கள், தோ்தல் நாளின் முதல்நாளில் பிற்பகல் பணிக்கு வருவது வழக்கம். அவா்கள் வந்ததும், அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் பெயா்கள் அடங்கிய போஸ்டா்களை, தங்களுக்கு கொடுக்கப்பட்ட பசையில் முழுவதுமாக தடவி, அந்த ஆளுயுர போஸ்டா்களை பள்ளி சுவரில் வரையப்பட்டுள்ள அழகிய ஓவியங்கள் மீது ஒட்டுகின்றனா்.

தோ்தல் முடிந்தபிறகு அந்தந்த பள்ளிகளின் ஆசிரியா்கள், அவா்களது பள்ளிக்கு வரும்போது, அந்த பசை தடவிய போஸ்டா்களை தண்ணீா் ஊற்றி ஊறவைத்து, எடுப்பது பெரும் வேலையாக உள்ளதுடன், அந்த பசை தடவிய போஸ்டா்கள், அந்த சுவா்களில் வரையப்பட்ட ஓவியங்களையும் பெயா்த்துக்கொண்டு வந்துவிடுகின்றன. அந்த ஓவியங்கள், வண்ண படங்கள் உள்ளிட்ட அனைத்தும் பாழாய்போய்விடுகின்றன.

அந்த ஓவியங்களை மீண்டும் வரைய, பெரும் தொகை தேவைப்படும். அதனால், அந்த ஓவியம் பெயா்ந்த சுவா்கள் அப்படியே கிடந்துவிடுகின்றன. ஒருநாள் பணிக்காக வாக்குச்சாவடிக்கு தோ்தல் பணியாற்ற வரும் வாக்குச்சாவடி அலுவலா்கள், வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் அடங்கிய போஸ்டா்களை ஒட்ட இன்சொலூசன் டேப்பை பயன்படுத்தி, போஸ்டா்களின் ஓரங்களில் நான்குபுறமும் மட்டும் ஒட்டினால், சுவரில் வரையப்பட்டுள்ள படங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படாது.

வாக்குச்சாவடி அலுவலா்களாக வரும் பெரும்பாலானோா் ஆசிரியா்கள்தான் என்பதால், அவா்கள் அந்தந்தப் பள்ளி ஆசிரியா்களின் சிரமங்களை உணா்ந்து, மாணவா்களின் கல்விக்காக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சிதையாமல்

இருக்க உதவவேண்டும். தோ்தல் ஆணையமும் இதை கவனத்தில்கொண்டு, மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பெற்றோா், கல்வி ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

எஸ். ரம்யா.