நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வாழப்பாடியில் தொடரும் பாரம்பரிய திருமண முறை: தாய்மாமன் சீர்வரிசை, மணமக்கள் ஊர்வலங்கள் அதிகரிப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:37 pm

பெரியார் மன்னன்

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், பாரம்பரிய முறைப்படி திருமணங்களும், உறவுகள் புடைசூழ தாய்மாமன் சீர்வரிசை ஊர்வலம், மணமக்கள் ஊர்வலங்களும் தொடர்ந்து வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மணவிழாக் காணும் மணப்பெண் மற்றும் மணமகனுக்கு தாய்மாமன் தலைமையில் புத்தாடை, உணவு தானியங்கள், தின்பண்டங்கள், பழங்கள் ஆகியவற்றை உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று சீர்வரிசையாக வழங்குவதும், பூமாலை, சந்தனம் அணிவித்து நலுங்கு வைத்து வாழ்த்துவதும் பாரம்பரிய வழக்கமாகும்.

இதுமட்டுமின்றி, மணம் முடிந்ததும் முகூர்த்தக் கூரைச் சேலையுடன், மணமகனின் வேட்டியை முடிந்து, இருவரது கை விரல்களை கோர்த்துப் பிடிக்கச் செய்து மணமக்களை மணக்கோலத்தோடு கிராமத்தைச் சுற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று, கோவில்களில் வழிபாடு நடத்திய பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்வதும் மரபாகும்.

ஆனால் சமீப காலமாக கிராமப்புறங்களிலும் கூட வீடுகளில் திருமணங்கள் நடத்துவது குறைந்து, நகர்ப்புற திருமண மண்டபங்களைத் தேடிப்பிடித்து திருமணங்களை நடத்துகின்றனர். முகூர்த்தம் முடிந்ததும் உறவினர்கள், நண்பர்களுக்கு மண்டபத்திலேயே விருந்து வைத்துவிட்டு, மணமக்களை வாகனங்களில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.

இதனால், பெரும்பாலான பகுதியில் கிராமப்புறங்களிலும் கூட பாரம்பரிய முறைத் திருமணங்களும், தாய்மாமன் நலுங்கு சீர்வரிசை ஊர்வலம், மணமக்கள் மணக்கோல ஊர்வலங்கள் நடைபெறுவது குறைந்து வருகிறது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணங்களும், உறவுகள் புடைசூழ  தாய்மாமன்  நலுங்கு சீர்வரிசை ஊர்வலம், மணமக்கள் மணக்கோல ஊர்வலமும் நடைபெறுவது தொடர்ந்து வருகிறது. வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மேள வாத்தியம் முழங்க, மணப்பெண்ணிற்கு உறவுகள் ஒன்றுகூடி தாய்மாமன் நலுங்கு சீர்வரிசை கொண்டு செல்லும் ஊர்வலம் நடைபெற்றது.

நெருங்கிய உறவுகளின் திருமணத்திற்குக் கூட முகூர்த்த நேரத்திற்கு சென்று வாழ்த்தி விட்டு, விருந்து உண்டதும் திரும்பிவிடும் புதிய காலாச்சாரத்திற்கு மாறாமல், வாழப்பாடி பகுதி கிராமங்களில் இன்றளவிலும் உறவுகள் கூடி சீர்வரிசை, மணமக்கள் ஊர்வலங்கள் நடத்தி, பாரம்பரிய முறைப்படி திருமணங்களை நடத்தி பண்பாடு கலாச்சாரத்தை பிரதிபலித்து வருவதற்கு, பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி அக்ரஹாரம் கணபதி தெரு அறிவுக்கரசி தங்கவேல் கூறியதாவது:

"எனது மகள் அகிலாவிற்கும், சேலத்தைச் சேர்ந்த மணிவண்ணனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. எங்களது இல்லத் திருமணத்திற்கு, மணப்பெண்ணின் தாய்மாமன்கள் தலைமையில் உறவுகள் ஒன்றுகூடி தாம்பூல சீர்வரிசையை தட்டுக்களை கைகளில் ஏந்தியபடி மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வந்து கொடுத்தனர். அவர்களுக்கு அறுசுவை விருந்து வைத்து உபசரித்தோம். உறவுகளை மேம்படுத்தும் விதத்தில், எங்களது மகளின் திருமணத்திற்கு, உறவினர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாகக் கொண்டு வந்து சீர்வரிசை கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.