சேலம் மாநகராட்சியில் பயன்பாடில்லாத ஆடு அறுக்கும் கூடங்கள்!
சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆடு அறுக்கும் கூடங்கள் பயன்பாடின்றி உள்ளன.


சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆடு அறுக்கும் கூடங்கள் பயன்பாடின்றி உள்ளன. அதே வேளையில், புற்றீசல் போல சாலையோரங்களில் நூற்றுக்கணக்கான இறைச்சிக் கடைகள் முளைத்து, சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்வோர் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் ஆடு அறுக்கும் கூடம் சுமார் மூன்று இடங்களில் உள்ளது. அம்மாப்பேட்டை மண்டலத்தில் வ.உ.சி. மார்க்கெட் வளாகத்தில் 2009-இல் ரூ.10 லட்சத்தில் ஆடு அறுக்கும் கூடம் பராமரிப்பு செய்து கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் குகை கறி மார்க்கெட் பகுதியில் ரூ.25 லட்சத்தில் கடந்த 2013-14-இல் ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டது. பின்னர் கொண்டலாம்பட்டி மணியனூர் பகுதியில் ரூ.89.15 லட்சத்தில் ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டது.
இதில் குகை, மணியனூர் பகுதியில் உள்ள ஆடு அறுக்கும் கூடங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன.
சேலம் மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் ஆட்டிறைச்சிகளை விற்பனை செய்ய ஆடு அறுக்கும் கூடங்களில் மட்டுமே ஆடுகளை அறுக்க வேண்டும். ஆனால், மாநகராட்சியில் பல ஆண்டுகளாக ஆடு அறுக்கும் கூடங்கள் செயல்படாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளன.
புற்றீசல் போல சாலையோர இறைச்சிக் கடைகள்: குறிப்பாக மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, நெத்திமேடு, தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி, குகை, கிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் ஆட்டிறைச்சிக் கடைகள் திறந்தவெளியில் செயல்பட்டு வருகின்றன.
விதிகளுக்கு புறம்பாக சாலையோரங்களில் செயல்படும் ஆட்டிறைச்சிக் கடைகளில் திறந்தவெளியில் இறைச்சி வாங்க வருவோர் முன்னிலையில் ஆடுகளை அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆடுகளை அறுப்பதற்கு கடைகளையோ, வெளி இடங்களையோ பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி சாலையோரங்களில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ஆடு வெட்ட ரூ.20 கட்டணம்: ஆடுகளை இறைச்சிக் கூடத்தில் வைத்து அறுப்பதற்கு ஒரு ஆட்டுக்கு ரூ.20 கட்டணமாக குத்தகைதாரர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அறுக்கும் கூடத்துக்கு கொண்டு வரப்படும் ஆடுகளை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, ஆரோக்கியமான ஆடுகளை மட்டுமே அறுக்க வேண்டும். இறைச்சிக் கடை உரிமம் பெற்றவருக்கு மட்டுமே ஆடுகளை அறுக்க அனுமதிக்க வேண்டும்.
மேலும், கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்த விவரம், இறைச்சிக்காக அறுக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
சுகாதாரமற்ற முறையில்: இதுதவிர கருவுற்ற ஆடுகள், கருவுற்று மூன்று மாதங்களுக்கு குறைவான ஆடுகள், மூன்று மாதங்களுக்கு குறைவாக வயதுடைய ஆடுகள், நோயுள்ள ஆடுகளை வெட்டக் கூடாது என பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படாமல் உள்ளன.
மாநகராட்சி விதிமுறைகள் ஒருபுறம் இருக்க ஆடு அறுக்கும் கூடங்களுக்கு யாருமே ஆடுகளை கொண்டு வருவதில்லை. மாறாக விதிகளுக்குப் புறம்பாக சுகாதாரமற்ற முறையில் ஆடுகளை அறுத்தும், எந்தவித பரிசோதனை இல்லாத முறையில் ஆடுகள் சாலையோரக் கடைகளில் வெட்டியும் விற்பனை செய்யப்படுகின்றன.
2011 முதல் ஏலம்: மாநகராட்சியில் உள்ள குகை, மணியனூர் ஆடு அறுக்கும் கூடங்கள் பயன்பாட்டில் இல்லாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் குத்தகைதாரர்கள் ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில், 2011 முதல் 2017 வரை எம்.சுப்பிரமணி என்பவருக்கு ஏலம் விடப்பட்டது.
2011-இல் ரூ.7.17 லட்சமும், 2012 (ரூ.7.35 லட்சம்), 2013 (ரூ.7.71 லட்சம்), 2014 (ரூ.8.10 லட்சம்), 2015 (ரூ.8.51 லட்சம்), 2016 (ரூ.8.93 லட்சம்), 2017 (ரூ.8.93 லட்சம்) ஏலம் விடப்பட்டது.
அதேபோல 2018-இல் எஸ்.சேகர் என்பவருக்கு ரூ.9.38 லட்சத்துக்கும், 2019-இல் ரூ.9.85 லட்சத்துக்கும் மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கொண்டலாம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தகவல்களை பெற்ற சிவராமன் கூறுகையில், மாநகராட்சி இறைச்சி அறுக்கும் கூடம் பயன்பாடின்றி உள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் அறுக்கும் கூடங்கள் ஏலத்துக்கு விடப்படுகின்றன. ஆடு அறுக்கும் கூடத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் தங்களுக்கு வருவாய் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் இறைச்சிக் கடைகளுக்கு சென்று ஆடுகளை அறுக்க நிர்ணயிக்கப்பட்ட ரூ.20 தொகைக்கு கூடுதல் தொகையை வசூல் செய்கின்றனர்.
மேலும், சேலம் மாநகராட்சி முழுவதும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்வது குறித்து தொடர்புடைய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...