சேலம் தபால் நிலைய சேவை மையம் மூலம் 31,678 பாஸ்போர்ட் விநியோகம்! நாளொன்றுக்கு 100 பேர் விண்ணப்பம்
சேலம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் மூலம் கடந்த 2017 மார்ச் முதல் ஆகஸ்ட் 2018 வரையிலான


சேலம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் மூலம் கடந்த 2017 மார்ச் முதல் ஆகஸ்ட் 2018 வரையிலான ஒன்றரை ஆண்டுகளில் 31,678 பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்கு மண்டல பகுதியில், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட்டு
வருகிறது.
இதனிடையே, பாஸ்போர்ட் பெற வேண்டுமெனில், சேலத்தில் இருந்து கோவை நகருக்கு சுமார் 160 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டி இருந்தது. இதனால் பாஸ்போர்ட் பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கால விரயத்தைத் தவிர்க்கவும், பொதுமக்கள் எளிதாக பாஸ்போர்ட் பெறவும் தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்பேரில், கோவை பாஸ்போர்ட் அலுவலக மண்டலத்தின் கீழ் வரும் அனைத்து மாவட்டங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கடந்த 2017 மார்ச் மாதம் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. இதற்கென பிரத்யேக சேவை
மையம் வேலை நாள்களில் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்து வருகின்றனர். இதனால் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
கடந்த 2017 மார்ச் மாதம் தொடங்கி 2018 செப்டம்பர் மாதம் வரை 34,042 பேர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 31,678 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என கோவை பாஸ்போர்ட் மண்டல
அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, சேலம் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் கூறியது: சேலம் தலைமை தபால் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையம் மூலம் பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காண்பித்து வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 100 பேர் வீதம் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கின்றனர். பாஸ்போர்ட் சேவைக்கு நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, தேவையான அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, கைவிரல் ரேகை, கண் விழிப் பதிவு போன்ற விவரங்கள், சேகரிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதைத் தொடர்ந்து காவல் துறை விசாரணை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த விசாரணை ஆய்வு முடிந்த பிறகு, பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் மூலம் பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் மூலம் நாளொன்றுக்கு 100 பேர் விண்ணப்பம் செய்து வரும் நிலையில், மாதத்துக்கு சுமார் 2,500 பேர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கின்றனர். அந்தவகையில்,
கடந்த மார்ச் 2017 முதல் 2018 செப்டம்பர் வரை 34,042 பேர் விண்ணப்பித்துள்ளனர். கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அளித்த தகவலின் பேரில் 31,678 பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல் சாதாரண முறையில் பாஸ்போர்ட் ரூ.1,500 கட்டணம் செலுத்தி பெறலாம். தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விரும்புவோர், கோவை பாஸ்போர்ட் சேவை மையத்தின் மூலம்தான் பெற முடியும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...