சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள்: குறைந்தபட்சம் 50 சதவீத சிறுபான்மையின மாணவர்களைச் சேர்க்க அரசாணை
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்குள்பட்ட சிறுபான்மையின அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவுக்கு


தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்குள்பட்ட சிறுபான்மையின அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவுக்கு சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களை சேர்க்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த அரசாணை (எண்.65) வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் மொழிவாரியாகவும், மத வாரியாகவும் பிரிக்கப்பட்டு, சிறுபான்மையின அந்தஸ்து பெற்று நடத்தப்பட்டு வருகின்றன. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 30 (1) மூலம் சிறுபான்மை அந்தஸ்து மற்றும் உரிமைகள், சலுகைகள் பெறப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையின அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் சுயநிதி அடிப்படையிலும், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு உதவி பெற்று இயங்கும் பள்ளிகள் ஆசிரியர் நியமனம் தொடங்கி, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 2009-இல் நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுவதில்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் சுமார் ஆயிரக்கணக்கான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பள்ளிக் கல்வித் துறைக்குள்பட்ட சிறுபான்மையின பள்ளிக் கல்வி நிறுவனங்களால் நிர்வாக ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவிக்கிறது.
இந்த நிலையில், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருப்பதைப் போல, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விகிதம் குறித்த நிர்ணயம் செய்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் உள்ள விவரம்:
சி.ஸ்டீபன்சன் ரூபாசிங் என்பவர் தொடுத்த வழக்கில் (1993), சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டுமே தவிர, முகமூடி அணிந்திருப்பது போல செயல்படக் கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், பி.ஏ.இனாம்தார் என்பவர் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக அரசு உதவி பெறும் சிறுபான்மையினக் கல்வி நிறுவனம் தொடர்பான வழக்கில் (2005), சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையின மாணவர்களை மட்டும் சேர்ப்பது சரியானது தான் என்றாலும், இதர சிறுபான்மையினத்தவர் அல்லாதவர்களையும் சேர்க்க வேண்டும் என்றும், இல்லையெனில் பிரிவு 30 (1) அர்த்தமற்றதாகவும், பலவீனமாகதாகவும் இருக்கும் எனத் தீர்ப்பளித்தது.
அதேபோல, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்பான டி.எம்.ஏ. பாய் பவுண்டேஷன், கர்நாடக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் (2002), மாநில அரசுக்கு சிறுபான்மையினக் கல்வி நிறுவனங்களில், சிறுபான்மையின மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்பாக நிர்ணயம் செய்ய அதிகாரம் உண்டு. அதேபோல, கல்வி நிறுவனம் அமைந்திருக்கும் பகுதியில் வாழும் சிறுபான்மையினர் எண்ணிக்கையைப் பொருத்து சேர்க்கை விகிதம் குறித்து நிர்ணயம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள், சிறுபான்மையினத்தவரை சேர்த்துக் கொள்வதில் முழுமையான உரிமையை பாதுகாத்திட வேண்டும். சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் எந்தவித விதிமீறல் அல்லாத வகையில் சிறுபான்மையினத்தவர் அல்லாதவர்களையும் சேர்த்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், பி.ஏ.இனாம்தார் மற்றும் பி.ஏ.பாய் பவுண்டேஷன் வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்புகளின்படி, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விகிதம் குறித்து நிர்ணயம் செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கொடுத்த பரிந்துரையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்ச சிறுபான்மையின மாணவர் சேர்க்கை 70 சதவீதமாக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசு 50 சதவீத அளவுக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், சிறுபான்மையின மாணவர் சேர்க்கை இருக்கலாம் என நிர்ணயித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் அளித்த பரிந்துரைகளை அடுத்து சிறுபான்மையின மாணவர் நலன் காக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள்:
தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கீழ்வரும் அனைத்து கல்வி நிறுவனங்கள் அதாவது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்பட அனைத்து சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் 50 சதவீதத்துக்கு குறையாமல் சிறுபான்மையின மாணவர்களை ஒவ்வொரு கல்வியாண்டிலும் சேர்த்திட வேண்டும்.
அதே வேளையில், 50 சதவீதத்துக்கு குறைவாக சிறுபான்மையின மாணவர் சேர்க்கை இல்லையெனில், அனைத்து சிறுபான்மையின மாணவர்களையும் கல்வி நிறுவனங்களில் சேர்த்திட வேண்டும்.
அரசு நிதி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் அதாவது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்பட அனைத்து சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் 70 சதவீத அளவுக்கு மேல் சிறுபான்மையின மாணவர்களைச் சேர்க்கக் கூடாது.
சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் சுமார் 50 சதவீத அளவுக்கு சிறுபான்மையின மாணவர் சேர்க்கையை உறுதி செய்திட போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில், சிறுபான்மையின மாணவர் சேர்க்கையை ஒளிவுமறைவு இல்லாமல் நடத்திட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில எல்லைகளில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையின மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட சிறுபான்மையின மாணவர் குறித்த பதிவுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஏப். 5-இல் வெளியிட்ட அரசாணை எண் 65-இல் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...