/

கிராமியக் கலைகளை போற்றும் பொன்னாரம்பட்டி கிராம பெண்கள்!

சேலம் மாவட்டம்,  வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில் கிராமியக் கலையான கோலாட்டத்தை கற்றுக் கொள்ளவும்,

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:51 am

பெரியார் மன்னன்

சேலம் மாவட்டம்,  வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில் கிராமியக் கலையான கோலாட்டத்தை கற்றுக் கொள்ளவும்,  பயிற்சி அளிக்கவும், விழாக் காலங்களில் அரங்கேற்றம் செய்வதிலும் பெண்கள் ஆர்வம் காட்டி வருவதால்,  கோலாட்டக் கலை புத்துணர்வு பெற்று வருகிறது.
 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால்,  நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் சித்திரிக்கும்,   பாரம்பரிய கிராமியக் கலைகளின் மீதான தாக்கமும்,   ஈடுபாடும் கிராமப்புற மக்களிடையே படிப்படியாகக் குறைந்து வருகிறது. 
இதனால்,  கோலாட்டம்,  மயிலாட்டம்,   தப்பாட்டம்,  ஒயிலாட்டம்,  கரகம்,   காவடி,  சேர்வை,  கும்மி போன்ற காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளும் பாரம்பரிய கிராமியக் கலைகளைக் கற்றுக் கொள்ளவும்,  பயிற்சி அளிக்கவும் தற்கால இளைஞர்கள்,  இளம்பெண்களிடையே ஆர்வம் இல்லாததால்,  அந்தக் கலைகள் நலிந்து
வருகின்றன.
ஒரு சில பகுதியில் கிராமப்புறங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் இன்றளவும் கரகம்,  காவடி போன்ற கிராமியக் கலைகளை குலத்தொழிலாகச் செய்து வரும் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருவதால்,  இன்னும் அந்த கலைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில்,  வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில்,  கிராமியக் கலையான கோலாட்டத்தைக் கற்றுக் கொள்ளவும்,  பயிற்சி அளிக்கவும், விழாக் காலங்களில் அரங்கேற்றம் செய்வதிலும் பெண்கள் ஆர்வம் காட்டி வருவதால்,   இப் பகுதியில் கோலாட்டக் கலை புத்துணர்வு பெற்று வருகிறது.
 வாழப்பாடியை அடுத்த பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாடக இயக்குநரும்,  கிராமியக்கலை பயிற்றுநருமான கணேசன் என்பவர் ,  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, பொன்னாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு,  கோலட்டக் கலையைக் கற்றுக் கொடுத்தார்.
அக் கலையை ஆர்வத்தோடு கற்றுக்கொண்ட கிராமப் பெண்களான  பத்மாவதி,   தவமணி,   காசியம்மாள்,   சுதா,  பேபி,  செல்வகோகுலரசி,  செல்வாம்பாள்,   சுஜாதா,  தனலட்சுமி,  கோமதி,  கீர்த்தனா,  புவனேஸ்வரி ஆகியோர் ஓம்சக்தி கோலாட்டக் குழு என்ற பெயரில் இணைந்து,   விழாக் காலங்களில்,  நாட்டுப்புறப் பாடல்களோடு கோலாட்டத்தையும் அரங்கேற்றி,  கிராம மக்களை மகிழ்வித்து வருகின்றனர். 
 அது மட்டுமின்றி,  ஆர்வமுள்ள இளம்பெண்களுக்கு கற்றும் கொடுத்து வருகின்றனர்.  இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்புற கிராமத்தினரும்,   விழாக் காலங்களில் கோலாட்டத்தை அரங்கேற்றவும்,  பெண்களுக்குப் பயிற்சி அளிக்கவும் அழைப்பு விடுத்து வருகின்றனர். 
இதுகுறித்து ஓம்சக்தி கோலாட்டக் குழுவைச் சேர்ந்த பத்மாவதி கூறியது: 
20 ஆண்டுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில்,   திரைப்பட நடன நிகழ்ச்சி நடத்துவதைத் தவிர்த்து,  பெண்கள் ஒன்றிணைந்து  கிராமியக் கலையை நடத்தி மக்களை மகிழ்விக்க முடிவு செய்தோம்.  எங்களுக்கு பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் கோலாட்டக் கலை குறித்து பயிற்சி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது கோலாட்டத்தை அரங்கேற்றி வருகிறோம்.  எங்கள் கிராம மக்கள் மட்டுமின்றி,  சுற்றுப்புற கிராம மக்களும் திரண்டு வந்து ரசித்து பாராட்டிச் செல்கின்றனர். 
அதனால்,  எங்களுக்கு பின்னர் அடுத்த தலைமுறைக்கும் கோலாட்டக் கலையைக் கொண்டு செல்லும் வகையில்,  ஆர்வமுள்ள இளம்பெண்களுக்கும் பயிற்சி அளித்து  வருகிறோம். கோலாட்டத்துக்கு வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களிடையே நல்ல வரவேற்று கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.