விபத்துகளுக்கு காரணம் பராமரிப்பற்ற பேருந்துகளா?
உதகை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளுக்கு போதிய


உதகை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளுக்கு போதிய பராமரிப்பற்ற பேருந்துகள் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் அரசுப் பேருந்துகள் நஷ்டத்தில் இயக்கப்படுவதாக தொடக்கம் முதலே குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும் மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுவதுண்டு. உதகை அருகே மந்தாடா பகுதியில் வியாழக்கிழமை விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து மிகவும் பழைய பேருந்து என்று கூறப்படுகிறது. இந்தப் பேருந்தைப் போலவே மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் உள்ளன. மழைக்காலங்களில் பேருந்துகளுக்குள் குடை பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஜன்னல்களுக்கு கண்ணாடிகள் இல்லாமலும், கதவுகள் இல்லாமலும் இயக்கப்படுவதால், குளிர் காலத்தில் அரசுப் பேருந்துகளில் அமர முடியாத நிலை நிலவுகிறது.
மலைப் பாதையில் வழியில் நிற்கும் பேருந்துகள், பஞ்சரான டயர்கள், போதிய உதிரி பாகங்கள் இல்லாத நிலை, ஓடாமல் நிறுத்தப்பட்டிருக்கும் பேருந்திலிருந்து கழற்றி வேறு பேருந்துக்குப் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், போதிய ஓய்வின்றிப் பணியாற்றும் ஊழியர்கள் என்ற நிலையில்தான் உதகையில் அரசு போக்குவரத்துக் கழகம் இயங்கி வருகிறது.
இவை தவிர ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மலைப் பாதையில் அரசுப் பேருந்தை இயக்குமளவுக்கு முழு திறன் படைத்தவர்கள்தானா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அனுபவம் வாய்ந்தவர்களைத் தவிர புதிதாக வருபவர்கள் மலைப் பாதையில் வேகம் காட்டுபவர்களாகவே உள்ளனர்.
இதுபோன்ற பிரச்னைகளை போக்குவரத்துக் கழகத்தில் கொண்டிருக்கும் சூழலில், நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பயணிகள் உயிரைக் கையில் பிடித்தபடியேதான் தினமும் பயணிக்கின்றனர் என்பது சோகமான உண்மை.
இது வரை நிகழ்ந்த பெரும் விபத்துகள்
உதகை அருகே மந்தாடா பகுதியில் தற்போது வியாழக்கிழமை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற பெரிய விபத்து 2008ஆம் ஆண்டு நிகழ்ந்ததாகும். கல்லட்டி மலைப் பாதையில் உதகையிலிருந்து மாயாறு சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்திருந்தனர்.
அதற்கு முன்னர் 1998ஆம் ஆண்டில், கைகாட்டி அருகிலுள்ள அறையட்டி பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...