நீலகிரி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் ஆதார் எண்ணைப் பதிவு செய்யாத சுமார் 31,000 குடும்பங்களுக்கு டிசம்பர் மாதத்தில் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர, ஆதார் எண்ணைப் பதிவு செய்தவர்களுக்கும் அந்த எண் கணினியில் பதிவாகாத சூழலில் அவர்களுக்கான பொருள்களும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசாக இலவச வேட்டி, சேலையும் இவர்களுக்கு வழங்கப்படாது என்ற தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்தவும், போலி குடும்ப அட்டைகளைக் கண்டுபிடிக்கவும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடைந்த சூழலில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 2 லட்சத்து 6,663 குடும்ப அட்டைதாரர்களில் சுமார் 31,000 பேர் தங்களது ஆதார் எண்ணை குடும்ப அட்டைகளில் இணைக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டிசம்பர் மாதத்தில் அவர்களுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட வேண்டிய பொருள்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆதார் எண் பதிவு செய்தும் கணினியில் பெயர் விடுபட்டவர்களுக்கு வீடு, வீடாகச் சென்று நேரில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், எந்தப் பகுதிக்கு, எந்த நாளில் ஆய்வுக்காக யார் வருவார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளுடன், வங்கிகளில் பணம் எடுக்கவும் சென்று விடுவதால் ஆய்வுக்காக வரும்போது, வீடுகளில் ஆளில்லாத சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பொது முகாம்களை குறிப்பிட்ட தேதிகளில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண்களும் பதிவு செய்யப்பட வேண்டுமா அல்லது குடும்பத் தலைவரின் ஆதார் எண் மட்டும் பதிவு செய்தால் போதுமா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. இவற்றைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலி குடும்ப அட்டைகளைக் களையெடுக்கும் நோக்கில் பொது விநியோகத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில் ஆதார் எண்களை இணைக்கும் பணிகளை வெளிப்படையாகவும், விரைவாகவும் முடிப்பதோடு, உண்மையான குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி மாதத்தில் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுகளைக் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கையாக உள்ளது.