யூகலிப்டஸ், பைன் மரங்கள் இல்லாத நீலகிரியை உருவாக்கத் திட்டம்
நீலகிரி மலை என்றாலே உயரமான யூகலிப்டஸ் மரங்களும், பைன் மரங்களும், சீகை மரங்களும்தான் நினைவுக்கு வரும்.


நீலகிரி மலை என்றாலே உயரமான யூகலிப்டஸ் மரங்களும், பைன் மரங்களும், சீகை மரங்களும்தான் நினைவுக்கு வரும்.
ஆனால், இந்த வகை மரங்களே இல்லாத காட்சியை நினைத்துப் பார்க்க முடியுமா?. முடியும் என்கின்றனர் வனத் துறையினர். இதற்காக திட்டமிடுவதற்காகவும், நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் முதல்வர் ஜெயலலிதா 5 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு அளித்துள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
யூகலிப்டஸ் வளர்ந்த கதை
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் யூகலிப்டஸ், சீகை, பைன், லெண்டானா, கரிக்கட்டான், பன்றி முள், கோத்தகிரி மெலார் ஆகியவை களைத் தாவரங்களாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றை முற்றிலுமாக நீலகிரியிலிருந்து அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக, சோலை மரக்கன்றுகளை நடவு செய்வதே அரசின் திட்டம்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீலகிரி மலைப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் சதுப்பு நிலங்களாகவே இருந்தன. இதனால், ஆங்காங்கே ஊற்றுகள் தோன்றி வற்றாத நதிகளாக ஆறுகள் இருந்தன. ஆங்கிலேயர்கள் நீலகிரிக்கு வந்தபோது இந்த சதுப்பு நிலப் பகுதிகள் அவர்களுக்கு இடையூறாக இருந்ததால் நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சிவிடும் தன்மைகொண்ட யூகலிப்டஸ் மரங்களை ஆஸ்திரேலியாவில் இருந்து நீலகிரிக்கு கொண்டு வந்து நட்டுள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
அதேபோல, நீலகிரியின் விறகுத் தேவைக்காகவும், கூழ்மரத்தின் தேவைகளுக்காகவும், வனப்பரப்பை அதிகரிக்கும் வகையிலும் ஹெலிகாப்டரில் இருந்து சீகை மரத்தின் விதைகள் தூவப்பட்டன. இவையும், மனிதர்கள் புகமுடியாத இடங்களிலெல்லாம் செழித்து வளர்ந்துவிட்டன. அதேபோல, பைன் மரங்களும் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆங்காங்கே பைன் மரக்காடுகளும் உள்ளன. ஆனால், இவற்றால் நீராதாரம் குறைவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருவதால் இந்த மரங்களையெல்லாம் களை மரங்கள் என தற்போது அறிவித்துள்ளனர்.
அகற்ற வேண்டியது அவசியம்
நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுமார் 70 சதவீத வனப்பரப்பு உள்ளது. இதில், குறிப்பாக தெற்கு வனக்கோட்டத்தில் மட்டும் மொத்தமுள்ள 32,000 ஹெக்டேர் பரப்பளவில் 16,000 ஹெக்டேரில் இத்தகைய மர வகைகள் உள்ளன. தெற்கு வனக் கோட்டத்தில் உற்பத்தியாகும் தண்ணீர்தான் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகத்தில் 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உள்ளது. இங்குதோன்றும் பவானி மற்றும் மோயார் நதிகள் வற்றாத நதிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. எனவே, நீராதாரங்களைப் பாதுகாக்கும் வகையில் களை மரங்களை அகற்ற வேண்டியது அவசியம் என்கிறார் நீலகிரி தெற்கு வனக்கோட்ட அலுவலர் பத்ரசாமி.
மீண்டும் சோலை மரக்காடுகள்
1940-க்குப் பிறகுதான் நீலகிரி மலையில் இயற்கைச் சோலை மரங்கள் குறைந்து களை மரங்களின் ஆதிக்கம் தொடங்கியதாகவும், இதனால் சோலைக் காடுகளும், புல்வெளிகளும்கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே உணவுத் தேவைக்காக வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியே வரும் நிகழ்வுகளும் தொடங்கியிருப்பதாக கூறும் வன அலுவலர், இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையிலேயே களை மரங்களை அகற்றி மீண்டும் சோலை மரக்காடுகளை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆலோசனைக் கருத்தரங்கம்
முதல்வர் அறிவித்துள்ள இப்புதிய திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசனைகளை கேட்கும் வகையில் உதகையில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. கோவை மண்டல வனப் பாதுகாவலர் வி.டி.கந்தசாமி தலைமையில் நடத்தப்பட்ட இக் கருத்தரங்கில், டான்டீ நிர்வாக இயக்குநர் டாக்டர் பாலாஜி, மாவட்ட வன அலுவலர்கள் சுகிர்தராஜ் கோயில்பிள்ளை, பத்ரசாமி, கோவை பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன், வயநாடு மாவட்டம் குருகுலம் தாவரவியல் காப்பகத்தில் இருந்து சுப்ரபா சேஷன், கோவை சேகான் அமைப்பின் டாக்டர் பாலசுப்ரமணியன், மத்திய அரசின் எமரால்டு மூலிகைப் பண்ணைத் தலைவர் டாக்டர் எஸ்.ராஜன், உதகை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விரைவில் களையெடுப்பு
இவர்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேவையான மாற்றங்களுக்குப் பின்னர் அரசின் ஒப்புதல் கிடைத்ததும் களை மரங்களை அகற்றும் பணி விரைவில் தொடங்கப்படும். மொத்தத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நீலகிரி மலையில் யூகலிப்டஸ், பைன், சீகை போன்ற மரங்கள் அரிதாகவே காணப்படும் என்பது உறுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...